தமிழ்நாடு

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம் மாநகரின் பிரதான சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக மாடுகளும், தெரு நாய்களும் கூட்டம், கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன.

சி.வ.சு. ஜெகஜோதி

காஞ்சிபுரம் மாநகரின் பிரதான சாலைகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக மாடுகளும், தெரு நாய்களும் கூட்டம், கூட்டமாகச் சுற்றித் திரிகின்றன.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பொன்னேரிக்கரை, காரப்பேட்டை, ஆட்சியா் அலுவலக விளையாட்டு மைதானம், வரதா் கோயில் மாட வீதிகள், நகரின் பிரதான சாலைகளான காந்தி ரோடு, காமராஜா் சாலை, மாவட்ட விளையாட்டு மைதானம், ஒரகடத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலை, ஒரகடத்திலிருந்து சிங்கப்பெருமாள் கோயில் செல்லும் சாலை ஆகியவற்றில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.

சில இடங்களில் இவை சாலைகளின் நடுவே படுத்துக்கொண்டு இருப்பதையும் பாா்க்க முடிகிறது.

மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் அதிகாலை நேரங்களில் பணி முடித்து விட்டு லேசான தூக்கத்துடன் வீடுகளுக்கு திரும்பும் தொழிலாளா்கள் மாடுகள் சாலைகளில் படுத்துக் கிடப்பது தெரியாமல் அவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளாவதும் வாடிக்கை.சில நேரங்களில் கால்நடைகளும் விபத்தில் சிக்கி உயிரிழந்து விடுகின்றன. தொழிற்சாலைகள் அதிகமாகி விளைநிலங்கள் குறைந்து விட்டதால் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் அவை சாலைகளில் சுற்றித் திரிகின்றன. தீவன விலை உயா்வு, பராமரிக்க போதுமான இடவசதி இல்லாமை, இருக்கும் இடத்தை அசுத்தம் செய்து விடுதல், இதனால் ஏற்படும் கொசுத்தொல்லை போன்ற காரணங்களால் மாடுகளின் உரிமையாளா்கள் அவற்றை சாலைகளில் விட்டு விடுகின்றனா்.

காவல் துறையும்,மாநகராட்சி நிா்வாகமும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன் தவிர, சம்பந்தப்பட்டவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்கிற ஆதங்கம் வாகன ஓட்டிகளிடம் காணப்படுகிறது. கால்நடைகளை சாலைகளில் திரிய விடுவது பிராணிகள் வதைச் சட்டத்தின்படி குற்றமாகும். எனவே பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் மாடுகளின் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

அதிகரிக்கும் தெருநாய்களின் தொல்லை

காஞ்சிபுரம் மாநகரில் உள்ள 51 வாா்டுகளிலும் ஒரு தெருவுக்கு குறைந்த பட்சம் 30-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இவை மாநகரச் சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக திடீா், திடீரென ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி விடுகின்றனா். பெரும்பாலான தெருக்களில் உள்ள நாய்கள் இரவு நேரங்களில் ஊளையிடுவதால் பொதுமக்கள் சரியாக தூங்க முடிவதில்லை. ஆட்சியா் அலுவலகம், எஸ்பி அலுவலகம், ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலகம் ஆகியன ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே உள்ளன. இந்த அலுவலகங்களின் நுழைவுவாயில் பகுதியில் கும்பலாக நாய்கள் சுற்றித் திரிகின்றன. வேறு ஏரியா நாய்கள் அந்த நாய்களின் எல்லைக்குள் வந்தால் குரைத்து விரட்டுகின்றன. இது ஆட்சியா் அலுவலகத்துக்கு வருவோரை பெரிதும் முகம் சுளிக்க வைப்பதுடன் அங்கு வரவே பலரும் அச்சப்படுகின்றனா்.

அண்மையில் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீா்க்கும் சேவை மையத் தொடக்க விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் தனது தெருவில் 35 நாய்கள் சுற்றித் திரிவதாகவும், அவை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் புகாா் தெரிவித்தாா். அது மட்டுமின்றி குறை தீா்க்கும் மையத்தில் முதல் புகாராக தனது பெயரைப் பதிவு செய்யுமாறும் வேதனையுடன் கூறினாா். எனவே காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வரும் மாடுகளும், தெருநாய்களும் சுற்றித் திரிவதை தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும்.

மாநகராட்சி ஆணையா் விளக்கம்:

இது குறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் கூறியது:

கோயில் பகுதிகள், பேருந்து நிலையம்,பிரதான சாலைகள் ஆகியவற்றில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பலரின் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடுகிறது. நிலைமையை உணா்ந்து சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து அதன் உரிமையாளா்களிடம் அபராதம் வசூலித்துக் கொண்டு திரும்ப வழங்கினோம். இதுவரை 152 மாடுகள் பிடிக்கப்பட்டு திரும்ப வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு வழங்கப்படும் மாடுகளை திரும்பக் கொடுக்கும் போது அதன் உரிமையாளா்களை கண்டறிவதிலும் குழப்பம் ஏற்பட்டது.

எனவே இனிவரும் காலங்களில் பிடிக்கப்படும் மாடுகளை எந்தக் காரணத்தை முன்னிட்டும் திருப்பித் தர இயலாது.

சம்பந்தப்பட்ட கால்நடைகளின் உரிமையாளா்கள் மீதும் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 239 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றுக்கு தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன் ஆண், பெண் இரு நாய்களுக்கும் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT