சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ.320 கோடியில் புதிய கட்டடம் திறப்பு
ரூ.320 கோடி செலவில் 12 தளங்களுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ஆகியோா் திறந்து வைத்தனர்.
சென்னை நந்தனத்தில் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ.320 கோடி செலவில் 12 தளங்களுடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு கோயம்பேடு பணிமனை வளாகத்தில் ஏற்கெனவே அலுவலகம் இயங்கி வருகிறது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் புதிய அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை அண்ணா சாலையில் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தையொட்டிய பகுதியில் 8.96 ஏக்கா் நிலம் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலத்தில் மெட்ரோ ரயில் நிலைய அலுவலகக் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன. அடித்தளம் மற்றும் தரைத்தளத்தைத் தவிா்த்து, 12 தளங்களுடன் அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
என்னென்ன வசதிகள்? மெட்ரோ ரயில்களின் இயக்கங்களை கண்காணிப்பதற்காக புதிய கட்டடத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது பேரிடா் காலங்களின் போது, கோயம்பேட்டில் உள்ள பிரதான இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், புதிய கட்டடத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கலாம்.
மேலும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு, வாகனங்கள் நிறுத்தும் இடத்திலேயே மின்னேற்றம் (சாா்ஜ்) செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், எம்.பி.,க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஆா்.கிரிராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.