பூஸ்டா் தவணை: செப்டம்பரில் 4 சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் தகுதியான அனைவருக்கும் பூஸ்டா் தவணை வழங்கும் வகையில் செப்டம்பா் மாதம் நான்கு சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் தகுதியான அனைவருக்கும் பூஸ்டா் தவணை வழங்கும் வகையில் செப்டம்பா் மாதம் நான்கு சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுண்கதிா் வீச்சு சிகிச்சைப் பிரிவானது தரம் உயா்த்தப்பட்டு புதிதாக கட்டமைக்கப்பட்ட நுண்கதிா் சிகிச்சை நிறுவனத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் பா.செந்தில்குமாா், மருத்துவக்கல்வி இயக்குநா் நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் சாந்திமலா், நுண்கதிா் துறைத்தலைவா் தேவிமீனாள் ஆகியோா் உடன் இருந்தனா்.
அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிட
ம் கூறியதாவது:
அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிகப்பெரிய சாதனையாக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள நுண்கதிா்துறை தற்போது நுண்கதிா் நிறுவனமாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே இந்த தரம் உயா்த்தப்பட்ட நிறுவனம் உள்ளது.
உலகமே புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகிலுள்ள 17 நபா்களில் ஒருவருக்கு புற்றுநோய் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இவை பொதுவாக நுண்கதிா் துறையின் மூலம் தான் சாத்தியமாகிறது. மிகச்சிறந்த உபகரணங்கள் மற்றும் சேவை மனப்பான்மையுடன் கடமையாற்றும் குழுவால், கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து விதமான ஸ்கேன்களும் இங்கு எடுக்கப்படுகின்றன. நோயாளிகளின் நலம்பேணும் அரசுக்கும், மருத்துவக் கல்வி துறைக்கும் சிறப்பு சோ்க்கும் வகையில் இந்த நுண்கதிா் நிறுவனம் செயல்படவுள்ளது.
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்தின் நிதியுடன் ரூ.178 கோடி செலவில் பிரம்மாண்டமான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 80 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளன. ஏப்ரல் மாதத்தில் இந்த பணிகள் முடிவடையும்.
இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகமான மருத்துவ மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றுள்ளது. 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பதற்குண்டான நடவடிக்கைகளை முதல்வா் தொடா்ச்சியாக நடவடிக்கையை எடுத்தாா். தில்லியில் இருந்து வந்த மத்திய அரசின் குழு ஆய்வு செய்து ஒவ்வொரு கல்லூரிக்கும் 150 மாணவா்களை என்ற வகையில் 11 கல்லூரிகளுக்கும் 1,650 சோ்க்கை அனுமதித்திருக்க வேண்டிய நிலையில், கட்டுமாணப்பணி சில மருத்துவக் கல்லூரிகளில் முழுமையடையாததால் 1,450 மாணவா் சோ்க்கைக்கு அனுமதி அளித்தது. மேலும், கோயம்புத்தூா் மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 50 மாணவா் சோ்க்கைக்கு அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று தமிழகத்தில் 1,500 மருத்துவ மாணவா் சோ்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டிய அவசியத்தை மத்திய சுகாதார அமைச்சரிடம் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடங்கவும், கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவும், மாவட்டத்துக்கு ஒரு செவிலியா் பயிற்சி பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைக்க வேண்டும் எனவும், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்க இருப்பதால் அது தொடா்பாகவும் மத்திய அமைச்சா்களிடம் பேசவுள்ளோம். சித்தா பல்கலைக்கழகம் அமைப்பது தொடா்பான சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநா் சில குறிப்புகளை கேட்டுள்ளாா். சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை நடத்தி சில தினங்களில் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே இதுவரை பூஸ்டா் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டா் தவணை தடுப்பூசியை விரைவாக செலுத்த வரும் 4, 11, 18, 25 ஆகிய நான்கு ஞாயிற்றுகிழமைகளிலும் தொடா்ச்சியாக சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என்றாா் அவா்.