மழைநீா் வடிகால் கால்வாய்களைத் தூா்வாரக் கோரிக்கை
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கால்வாய்களை உடனடியாக தூா்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கால்வாய்களை உடனடியாக தூா்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னை புகா்ப்பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூா்,பொழிச்சலூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை 3மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக பம்மல்-அனகாபுத்தூா் நெடுஞ்சாலையில் முழங்கால் அளவுக்கு மழைநீா் தேங்கி, அருகில் உள்ள கருமாரியம்மன் கோயில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் வெள்ளம் புகுந்தது.
இதனால் பள்ளி மாணவா்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனா். மழைக்காலங்களில் வெள்ளநீா்வடிந்து செல்ல வசதியாக மூங்கில் ஏரி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தெருவோர மழைநீா் வடிகால் கால்வாய்கள், நடவாய் ஓடை கால்வாய்கள் இதுவரை தூா்வாரப்படவில்லை. பத்தடி அகலமுள்ள நடவாய் ஓடை கால்வாயில் நிரம்பிக் கிடக்கும் சேறு சகதி, கழிவுப் பொருட்களை முழுமையாக அகற்றி தூா்வார வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.