முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? - ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம்

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு தேவை என்றும், மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்

Updated On : 28 மே, 2022 at 11:52 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:52 PM


தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு தேவை என்றும், மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கரோனா நோய்த்தொற்று மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும், தொற்றுகள் உருமாற்றம் அடைந்து மக்களை தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இங்கிலாந்து, ஸ்பெயின், சுவீடன் மற்றும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கரோனாவைத் தொடர்ந்து குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

மேலும், இந்தியாவில் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக விமான நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார் சுகாதாரத்துறை செயலர்.

அந்த கடிதத்தில், சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணா நகர், பெருங்குடி, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களிலும் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு சீராக அதிகரித்து வருகிறது. கல்வி நிறுவனங்களில் கரோனா தொற்று ஏற்படுவது மட்டுமல்லாமல், ஆங்காங்கே நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியிலும் தொற்று பரவுகிறது. இதுவரை கரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றாலும், இந்த நிலையில் தொடர்ந்தால், இணை நோய்கள் உள்ளவர்களும் முதியவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படலாம். அவர்கள் பாதிக்கப்பட்டால், நிலைமை இதே போன்று இருக்காது.

தொற்று அதிகரிப்பு என்பது சமூகத்தில் கரோனா நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்பதற்கான மறைமுக குறியீடாகும். தமிழ்நாட்டில் இதுவரை 93.74%  பேர் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 82.55% இரண்டாவது தவணை செலுத்தியுள்ளனர். எனினும் 43 லட்சம் பேர் இன்னும் ஒரு டோஸ் கூட செலுத்துக்கொள்ளவில்லை. 1.22 கோடி பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி டோஸ் தவறவிட்டுள்ளனர். 13 லட்சம் பேர் பூஸ்டர் செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள். இவர்கள் அனைவரும், அவரவர்களுக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ள நாம் ஊக்குவிக்க வேண்டும்.

தொற்று நடவடிக்கை தீவிரமாக இல்லாவிட்டால், தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். லேசான நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கூட்டங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தடுக்க வேண்டும். சுகாதார மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அனைவரது ஒத்துழைப்பும் தேவை. கண்காணிப்பு பணிகளை ஆட்சியர்கள் தீவிரப்படுத்தவும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.