சங்ககிரி: சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேர் திருவிழா நாளை (ஏப்.26) கொடியேற்றத்துடன் தொடக்கவுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சித்திரைத் தேர் திருவிழாவிற்கான அவசர ஆலோசனைக்குழு கூட்டம் சங்ககிரி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் ஆலய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி புதன்கிழமை தேர்திருவிழா தொடங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சித்திரைத் தேர்த்திருவிழா ஒவ்வொரு வருடமும் சித்திரை நட்சத்திரம் அன்று நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து நிகழாண்டு தேர்த்திருவிழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஆர்.சங்கரன் தலைமை வகித்தார்.
ஊர் பட்டக்காரர் எஸ்.ஏ. ராஜவேல், ஊர்கவுண்டனர் எஸ்.டி.சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.தங்கமுத்து, மாவட்ட துணைச் செயலர் க.சுந்தரம், சங்ககிரி ஒன்றியச் செயலர் கே.எம்.ராஜேஷ், நகரச் செயலர் கே.எம்.முருகன், லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் என்.கந்தசாமி, பக்காளியூர் எஸ்.சரவணன், வி.என்.பாளையம் சண்முகசுந்தரம் ஆகியோர் தேர் திருவிழா குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி புதன்கிழமை சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகள் மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளுதலும், மே 4ஆம் தேதி வியாழக்கிழமை திருத்தேர் வடம் பிடித்தலும், மே 15ஆம் தேதி திங்கள்கிழமை சுவாமி மலைக்கு எழுந்தருளுதல் வைபவம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டன.
திருவிழா தினசரி கட்டளைதாரர்கள், கோயில் அர்ச்சகர்கள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.