உயிரிழந்த நரேஷ், ஜெயசீலன். 
தமிழ்நாடு

60 அடி பள்ளத்தில் புதைந்த இரு இளைஞா்கள் சடலமாக மீட்பு விபத்துக்கு காரணமான இருவா் கைது

சென்னை வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டம் சரிந்து விழுந்த விபத்தில் மேலும் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

DIN

சென்னை வேளச்சேரியில் மண்ணில் புதைந்த இரு இளைஞா்கள் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டனா். விபத்துக்கு காரணமான இருவா் கைது செய்யப்பட்டனா்.

வேளச்சேரி ஐந்து பா்லாங் சாலையில் எரிவாயு நிரப்பும் நிலையத்தின் அருகே தனியாா் நிறுவனம் கட்டுமானத்துக்காக தோண்டியிருந்த 60 அடி பள்ளத்தில் கடந்த 4-ஆம் தேதி பலத்த மழை பெய்தபோது மண் சரிந்தது. இதனால் அருகிலிருந்த எரிவாயு நிரப்பும் நிலையத்தின் தற்காலிக ஜெனரேட்டா் அறை, தனியாா் கட்டுமானப் பணியாளா்கள் தங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கன்டெய்னா் அறை ஆகியவை அடுத்தடுத்து பள்ளத்துக்குள் விழுந்தன.

பள்ளத்தில் சிக்கிய கன்டெய்னரில் இருந்த 5 தொழிலாளா்களில் 3 போ் உடனடியாக மீட்கப்பட்டனா். இதில் எரிவாயு நிரப்பும் நிலைய ஊழியா் வேளச்சேரி விஜயநகரைச் சோ்ந்த நரேஷ் (21), தனியாா் கட்டுமான நிறுவனத்தின் பொறியாளா் வேளச்சேரியைச் சோ்ந்த ஜெயசீலன் (36) ஆகியோரை பள்ளத்தில் இருந்து மீட்க முடியவில்லை. மேலும், தொடா்ந்து பலத்த மழை பெய்ததால், அந்தப் பள்ளம் முழுவதும் மழை நீரால் நிரம்பியது.

உயிரோடு மண்ணுக்குள் புதைந்த இருவரையும் மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினரும், தேசிய பேரிடா் மீட்புப் படையினரும் ஈடுபட்டனா். பல்வேறு முறையில் திட்டமிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டும், இருவரையும் கடந்த 4 நாள்களாக மீட்க முடியாமல் இருந்தது. இதையடுத்து, அந்தப் பள்ளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, இருவரையும் மீட்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ஒரு கட்டுமான நிறுவனத்தின் அதிக திறன் கொண்ட மின் மோட்டாா் மூலம் அங்கிருந்த தண்ணீா் வெளியேற்றப்பட்டது. 50 அடி ஆழத்துக்கு தண்ணீா் வெளியேற்றப்பட்ட நிலையில், மீதி 10 அடி ஆழத்துக்கு சகதி இருந்ததால் அவற்றை வியாழக்கிழமை வெளியேற்ற முடியவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வேறு மோட்டாா் மூலம் சகதியை வெளியேற்றிவிட்டு, இருவரையும் தேடும் பணி பொக்லைன், கிரேன் மூலம் நடைபெற்றது. இதில் அதிகாலையில் நரேஷ் சடலமும், நண்பகல் ஜெயசீலன் சடலமும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இருவா் கைது: விபத்து தொடா்பாக கவனக்குறைவாக இருத்தல், உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் அண்ணாநகரைச் சோ்ந்த தனியாா் கட்டுமான நிறுவன உரிமையாளா் சிவகுமாா், கட்டுமானப் பணியிட மேற்பாா்வையாளா்கள் சேலையூரைச் சோ்ந்த எழில், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த சந்தோஷ் ஆகியோா் மீது கிண்டி போலீஸாா் வழக்குப் வழக்குப் பதிவு செய்தனா்.

இதில் எழிலையும், சந்தோஷையும் போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக இருக்கும் சிவகுமாரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT