அயனாவரம்: திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் காவலர் தற்கொலை
சென்னை அயனாவரத்தில் காவலர் அருண்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடுஅயனாவரம்: திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் காவலர் தற்கொலை
சென்னை அயனாவரத்தில் காவலர் அருண்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதப்படை காவலர் ஒருவர் அயனாவரம் பகுதியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்குக் காரணம் காவலரின் பணிச்சுமையா அல்லது குடும்பப் பிரச்னையா என பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திருநெல்வேலியை சேர்ந்தவர் அருண்குமார் (22). இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். காவல்துறை பணியில் சேர ஆர்வம் இருந்ததால் 2022 ஆம் ஆண்டு காவல்துறை பணியை பெற்றார். பின்னர் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார்.
இதையும் படிக்க.. நான் அவர் அல்ல.. சிறுநீர் விவகாரத்தில் ஆள்மாறாட்டம்; தவறான நபரின் காலை கழுவினாரா முதல்வர்?
இவருக்கு சுமார் 4 மாதத்திற்கு முன்பு திருநெல்வேலியில் திருமணம் நடைபெற்றது. மனைவியும் திருநெல்வேலி மாவட்டத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அருண்குமார் ஆயுதப்படை காவலரிலிருந்து குதிரைப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் திருமணம் ஆகி நான்கு மாதங்கள் ஆகியும் விடுமுறை அளிக்கப்படாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் இந்த நான்கு மாதத்திற்கு பிறகு 10 நாள்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுகிறது எனவும் செல்போனில் மட்டுமே தான் வாழ்க்கை தொடர்ந்து வருவதாகவும் தனது செல்போனில் ஆடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
சென்னை அயனாவரம் பகுதியில் தனியாக வசித்து வந்த ஆயுதப்படை காவலரான அருண்குமார் மன வேதனை அதிகமாக இருந்ததால் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயுதப்படை காவலரான அருண்குமாரின் உடல், கூறாய்வுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிக்க.. மக்களவைத் தேர்தல்: ராமநாதபுரத்தில் மோடி போட்டி?
பின்னர், அவரின் உடலை சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அயனாவரம் போலீசார் தரப்பில் ஆயுதப்படை காவலரான அருண்குமாரின் மனைவிக்கும் குடும்பத்தாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கோவை மாவட்ட டிஐஜி விஜயகுமார் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் ஒரு காவலர் சென்னையில் உயிரிழந்து உள்ளார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.