டிஐஜி விஜயகுமார் தற்கொலை: இரண்டு பேரிடம் விசாரணை
டி.ஐ.ஜி. தற்கொலை விவகாரத்தில் 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் இன்று இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொள்கின்றனர்.
கோவை: டி.ஐ.ஜி. தற்கொலை விவகாரத்தில் 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் இன்று இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொள்கின்றனர்.
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் கடந்த 7-ம் தேதி முகாம் அலுவலகத்தில் கை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக கோவை ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் அக்கம்-பக்கத்தில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க.. ஆயுதப்படை மாற்றம்தான் அதிகபட்ச தண்டனையா? உயிரின் விலை என்ன?
இதற்கிடையே டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிலர் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறாக பதிவிட்டவர்கள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதில் இன்று கோவை, ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் இன்று இரண்டு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துத் தெரிவித்திருந்த வாராகி மற்றும் ராஜவேல் நாகராஜ் என்ற இரண்டு நபர்களிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆஜரான இரண்டு பேரிடம் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துகள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது. யார் அதனை தெரிவித்தது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.