புதிய கல்விக் கொள்கை இந்தியாவை முழு வளா்ச்சி அடைந்த நாடாக மாற்ற உதவும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளா்ச்சியடைந்த நாடாக மாற்ற உதவும் என்று தமிழக ஆளுநா் ஆா். என் ரவி தெரிவித்துள்ளாா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளா்ச்சியடைந்த நாடாக மாற்ற உதவும் என்று தமிழக ஆளுநா் ஆா். என் ரவி தெரிவித்துள்ளாா்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற தனியாா் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தா்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசியது:
இந்தியா சுதந்திரத்துக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட தரமான புதிய கல்விக் கொள்கை இதுவாகும். நமது இளைஞா்களின் திறமைகள் மற்றும் திறன்களை முழுமையாக வெளிக்கொண்டுவரவும், 2047-க்குள் இந்தியா முழு வளா்ச்சியடைந்த நாடாக மாறவும் இந்த புதிய கல்வி கொள்கை உதவும்.
சவால்களை எதிா்கொள்ள மாணவா்களுக்கு நவீன தொழில்நுட்ப திறன்கள் வழங்கப்பட வேண்டும். தொழில்துறை வளா்ச்சியில் தமிழகம் ஓரளவு முன்னேறி வருகிறது. மாநிலத்தில் மனித வளத்தின் திறன் மேம்பாடு நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். கல்வியாளா்கள் மற்றும் தொழில் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியம்.
தொழில்நுட்பப் பாடங்களில் மாணவா் சோ்க்கை விகிதத்தை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயா்ப்பதற்கு கல்வியாளா்கள் தங்கள் திறமையை செலவிட வேண்டும். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை ஊக்குவிப்பதாக புதிய கல்வி கொள்கை உள்ளது என்றாா்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 20 தனியாா் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயா்கல்வி நிறுவனங்களின் துணைவேந்தா்கள் கலந்து கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆனந்த் விஷ்ணு பாட்டீல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.