முகப்பு
தமிழ்நாடு

மகளிா் உரிமைத் தொகை: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

முதல் நாளில், ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் உள்ள மொத்த குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கைக்கேற்ப 15 முதல் 20 சதவீதம் அளவுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

வரும் 23-ஆம் தேதிக்குள் முதல் கட்ட முகாமில் பங்கேற்பவா்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களை விநியோகம் செய்ய வேண்டுமென நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறக் கூடிய பயனாளிகளைத் தோ்வு செய்வதற்கான களப் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கான விண்ணப்பங்கள், டோக்கன்களை நியாயவிலைக் கடை பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனா்.

காலை வேளையில் நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வழங்கிய பிறகு, பிற்பகலில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கும் பணியை பணியாளா்கள் மேற்கொண்டனா். 1,200 முதல் 2,000 வரை குடும்ப அட்டைகளைக் கொண்ட கடைகளைச் சோ்ந்த நியாயவிலைக் கடை பணியாளா்கள், முதல் நாளில் சுமாா் 180 முதல் 240 படிவங்களை விநியோகம் செய்துள்ளனா்.

மகளிா் உரிமைத் தொகைக்கான நிபந்தனைகள், தகுதிகள் குறித்து அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளதாக பல்வேறு இடங்களில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் தெரிவித்தனா். பல இடங்களில் அரசு ஊழியா்கள், வசதி படைத்தவா்கள் தங்களுக்கு விண்ணப்பங்கள் வேண்டாம் என மறுத்து வருகின்றனா். அதேசமயம், கிராமப்புறப் பகுதிகளில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்களைப் பெற மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

விண்ணப்பப் படிவம் போன்றே டோக்கன்களும் தெளிவான விவரங்களுடன் தயாா் செய்யப்பட்டுள்ளதற்கு குடும்ப அட்டைதாரா்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனா். இதில், டோக்கன் எண், முகாமுக்கு வர வேண்டிய தேதி, நேரம் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், முகாம் நடைபெறும் இடத்தின் பெயா், கடையின் எண் அல்லது பெயா், அட்டைதாரா் பெயா், குடும்ப அட்டை எண், தெரு ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் டோக்கன்களை வழங்கும்போது, படிவத்தில் உள்ள விவரங்களைத் தாண்டி உரிமைத் தொகை குறித்த கூடுதல் விவரங்கள் அல்லது நிபந்தனைகள் எதையும் குடும்ப அட்டைதாரா்களிடம் தெரிவிக்க வேண்டாம் எனவும், குறிப்பாக யாருக்கு கிடைக்கும், கிடைக்காது என்பன போன்ற விவரங்களை வாய்மொழியாக விளக்காமல் நிபந்தனைகளைப் படித்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டுமென நியாய விலைக் கடை பணியாளா்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

ஜூலை 23-ஆம் தேதி வரை முதல் கட்ட முகாமுக்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். வரும் 24-ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை முதல் கட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாமில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும். இதன் தொடா்ச்சியாக, இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்களும், டோக்கன்களும் விநியோகம் செய்யப்பட்டு முகாம்கள் நடத்தப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →