சன்னியாசிப்பட்டி பேக்கரியில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற 3 பேர் கைது
சங்ககிரியை பேக்கரியில் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்லிட பேசியை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை சங்ககிரி போலீஸார் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் உள்ள பேக்கரியில் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்லிட பேசியை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூர், செங்காட்டனூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் கோகுல் என்பவர் சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் உள்ள தனியார் பேக்கரி கடையில் காசாளராக பணியாற்றி வருகிறார். மேலும் கடையில் கதிரேசன், மௌரிஸ் ஆகியோர் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் இருவர் கடைக்கு உள்ளே சென்று டீ வேண்டுமென கேட்டுள்ளனர்.
கடை ஊழியர்கள் டீ இல்லை, காபி மட்டும் உள்ளது என்று கூறியுள்ளனர். பேக்கரி ஊழியர்கள் காபி தயார் செய்து கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக காபி கேட்ட இருவர் கடையில் உள்ள பணத்தை எடுத்துள்ளனர். அதனை கடையில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர். தடுத்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி ரொக்கம் ரூ.6 ஆயிரம், ஒரு செல்லிடபேசியை கொள்ளையடித்துக் கொண்டு அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து கடையின் காசாளர் கோகுல், கடையில் பதிவான கேமரா பதிவுகளை கொண்டு சங்ககிரி போலீஸில் புகார் செய்துள்ளார்.
போலீஸார் வழக்குப்பதிவு செய்து சங்ககிரி பயணியர் விடுதிசாலை, காட்டாம்பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் சாரதி (19), சங்ககிரி, பச்சக்காடு மேடு பகுதியைச் சேர்ந்த ஷாஜஹான் மகன் இப்ராஹீம் (18), திருவள்ளூர் மாவட்டம், மோப்பேரி, பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் சஞ்சய் (18) உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சனிக்கிழமை அதிகாலை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரையும் இரவுக்குள் கைது செய்த போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினர்.