புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் கத்திக்குத்து: ஒருவர் பலி
புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் ஒருவர் கத்தியால் குத்தி ஞாயிற்றுக்கிழமை மாலை கொல்லப்பட்டார்.
புதுச்சேரியில் பாஜக நியமன எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் ஒருவர் கத்தியால் குத்தி ஞாயிற்றுக்கிழமை மாலை கொல்லப்பட்டார்.
புதுச்சேரி கொம்பாக்கம் பாப்பான்சாவடியைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. ஆகவே சகோதரர் வீட்டில் தங்கியிருந்தார். இவர் மீது மாஜிஸ்திரேட்டிடம் அவமரியாதையாக நடந்துகொண்டது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த ஜனவரியில் அவர் முதலியார்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான ஸ்டீபன் (38) என்பவரை தாக்கிய வழக்கில் முதலியார்பேட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த மே மாதம் பிணையில் வெளிவந்த ரமேஷ் முதலியார்பேட்டை பகுதியிலேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், முதலியார்பேட்டை ரோடியர் மில் சாலையில் உள்ள பாஜக நியமன எம்.எல்.ஏ. அசோக்பாபுவின் அலுவலக வளாகத்தில் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை மாலை மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு ஸ்டீபனும் இருந்ததாகத் தெரிகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் வைத்திருந்த கத்தி மற்றும் மதுப்பாட்டிலால் ரமேஷை ஸ்டீபன் தாக்கியுள்ளார். கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த ரமேஷ் மயங்கினார். உடனே ஸ்டீபன் தப்பியோடிவிட்டார். தகவல் அறிந்த முதலியார் பேட்டை போலீஸார் விரைந்து வந்து ரமேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சிகிச்சை அளித்த நிலையில் பலனின்றி சிறிது நேரத்தில் ரமேஷ் உயிரிழந்தார்.
ரமேஷ் தாக்கப்பட்ட இடம் பாஜக எம்.எல்.ஏ. அலுவலக வளாகம் என்பதால் பொதுமக்கள் குவிந்தனர். சம்பவ இடத்துக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா.சைத்தன்யா, முதலியார்பேட்டை பகுதி காவல் கண்காணிப்பாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டனர். உயிரிழந்த ரமேஷின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரிப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.