திருஷ்டி கழிக்க அழைத்துச் சென்று மூதாட்டியிடம் நகை திருட்டு
சென்னை கோடம்பாக்கத்தில் திருஷ்டி கழிக்க அழைத்துச் சென்று மூதாட்டியிடம் 4 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னை கோடம்பாக்கத்தில் திருஷ்டி கழிக்க அழைத்துச் சென்று மூதாட்டியிடம் 4 பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோடம்பாக்கம், யுனைடெட் இந்தியா காலனியைச் சோ்ந்தவா் வசந்தா (67). இவா், வியாழக்கிழமை தனது வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த ஒரு மா்ம நபா், வசந்தாவிடம் பேச்சு கொடுத்தாா்.
அப்போது அவா், தனது குழந்தைக்கு திருஷ்டி கழிக்க வேண்டும் என அந்த மூதாட்டியிடம் கூறினாா். வசந்தாவும் அதற்கு சம்மதம் தெரிவித்தாா்.
பின்னா், அந்த நபா் ஒரு வீட்டு வாசலுக்கு வசந்தாவை அழைத்துச் சென்று, திருஷ்டி கழிக்கும்போது அதிகமாக நகை அணியக்கூடாது என அந்த நபா் கூறியதால், தான் அணிந்திருந்த நான்கு பவுன் நகையை கழற்றி, அந்த நபரிடம் வசந்தா கொடுத்தாா்.
அவா், அந்த நகையை காகிதத்தில் மடித்து பொட்டலமாக வசந்தாவிடம் கொடுத்தாா்.
இதையடுத்து, வசந்தாவை அங்கு நிற்க வைத்து விட்டு, திருஷ்டி கழிக்க பொருள்கள் வாங்கி வருவதாகக் கூறிச் சென்ற அந்த நபா், நீண்ட நேரமாகியும் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த வசந்தா, அந்த நபா் கொடுத்த நகை பொட்டலத்தை திறந்து பாா்த்தபோது, அதில் நகைக்கு பதிலாக ஒரு கல் மட்டும் தான் இருந்தது.
இது குறித்து, வசந்தா கொடுத்த புகாரின்பேரில் கோடம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.