மேட்டூரில் தனியார் கூரியர் நிறுவன பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் திருடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் மாதையன் குட்டையில் உள்ளது இன்ஸ்டா கார்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம். ஆன்லைனில் பொதுமக்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை விநியோகிக்கும் பணியை இந்த நிறுவனம் செய்து வருகிறது. இந்தக் கிளையில் 20 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பணி முடிந்து பொருட்கள் விநியோகிக்க வாடிக்கையாளர்கள் கொடுத்த ரொக்கப் பணம் ரூ.4 லட்சத்தை அலுவலகத்தில் உள்ள பணப்பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு பணியாளர்கள் சென்று விட்டனர்.
இன்று காலை கூரியர் பார்சல் வண்டி வந்ததால் பார்சல் வாங்குவதற்காக நிறுவனத்தில் பணி புரியும் செல்வக்கண்ணன் என்பவர் வந்தார். அப்போது அலுவலகத்தில் முன்பு எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது. இதனைக் கண்டு அச்சமடைந்த அவர் அலுவலக மேலாளர் ரவிகுமாருக்கு தகவல் கொடுத்தார். அலுவலகத்திற்கு வந்து பார்த்த பொழுது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அலுவலகத்தில் இருந்த பணப்பெட்டி மாயமாய் இருந்தது.
இங்கிருந்த பணப்பெட்டி எதிரே உள்ள முட்புதரில் உடைக்கப்பட்டு கிடந்தது. அதிலிருந்த பணம் ரூ.4 லட்சம் திருடப்பட்டு இருந்தது.
அலுவலகத்தின் முன்பு இருந்த மின் விளக்கை அனைத்து விட்டு கண்காணிப்பு கேமராவை செயல் இழக்க செய்துவிட்டு பணப்பெட்டியின் எச்சரிக்கை மணி சப்தத்தை நிறுத்தி கண்காணிப்பு கேமரா பதிவு செய்யும் ஹாட்டிஸ்க்கை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பாக இன்று காலை தகவல் அறிந்த மேட்டூர் காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அலுவலகத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போக்குவரத்து அதிகம் நிறைந்த மேட்டூர் பவானி சாலையில் நடந்த இந்த துணிகர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.