கோவையில் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்!
கோவையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் சாலைகளும், வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கோவை: கோவையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் சாலைகளும், வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு 10 மணியளவில், கோவை மாநகர் பகுதிகளான ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், புலியகுளம், ரெட்பீல்டு, சுங்கம், ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், ரயில் நிலையம், செல்வபுரம், இடையர்பாளையம், குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான கணுவாய், தடாகம், துடியலூர், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதையும் படிக்க | நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்!
அவினாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கிய நிலையில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. கோவையில் மாநகரில் கனமழை பெய்யும் போதெல்லாம் இந்த மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மேலும், பயனீர் மில்ஸ் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் சில வீடுகளில் மழைநீருடன் கலந்து கழிவுநீரும் புகுந்தது. இதனால் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் குழந்தைகள், வயதானவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினார்கள்.
மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.