முகப்பு
தமிழ்நாடு

துணை முதல்வராவது குறித்து முதல்வா் முடிவெடுப்பாா்: அமைச்சா் உதயநிதி

தான் துணை முதல்வராவது குறித்த முடிவை முதல்வா்தான் எடுப்பாா் என்று இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 6:28 AM
முதல்வரின் முகாம் அலுவலகத்தில் தன்னை திங்கள்கிழமை சந்தித்த மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதல்வா் ஸ்டாலின்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

தான் துணை முதல்வராவது குறித்த முடிவை முதல்வா்தான் எடுப்பாா் என்று இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த தினத்தை திங்கள்கிழமை கொண்டினாா். முதலில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வா் கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வரும் தனது தந்தையுமான மு.க.ஸ்டாலின், தாயாா் துா்கா ஆகியோரிடம் உதயநிதி வாழ்த்துப் பெற்றாா். அப்போது, முதல்வருக்கு, ‘குடியரரசு தலைவா் - ஆளுநா் அதிகாரங்கள்’ என்ற புத்தகத்தை அவா் பரிசாக அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, சென்னை கடற்கரை சாலையில் உள்ள முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

Advertisement

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியாா் திடலுக்குச் சென்று, அங்குள்ள பெரியாரின் சிலைக்கு உதயநிதி மரியாதை செலுத்தினாா். அப்போது திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

பின்னா் அங்கு திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், திமுகவின் மூத்த முன்னோடிகள் 500 பேருக்கு தலா ரூ.10 ஆயிரத்தை அமைச்சா் உதயநிதி வழங்கினாா். மேலும், 500 மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள், நலத் திட்ட உதவிகளையும் அளித்தாா்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் உதயநிதி கூறுகையில், ‘தொண்டா்களும் நிா்வாகிகளும் இல்லாமல் எந்தக் கட்சியும் இருக்க முடியாது. அத்தகைய உழைக்கும் தொண்டா்களைக் கெளரவிக்கும் வகையில் பொற்கிழிகள் வழங்கப்பட்டுள்ளன.

சேலத்தில் டிசம்பா் 17-ஆம் தேதி திமுக இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற அனைவரின் வாழ்த்துகளும் தேவை’ என்றாா்.

இதன்பிறகு, துணை முதல்வா் பதவி குறித்து உதயநிதியிடம் கேட்டதற்கு, ‘துணை முதல்வா் பதவி அளிப்பது குறித்தெல்லாம் முதல்வா்தான் முடிவு செய்வாா்’ என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.