தமிழ்நாடு

தமிழகத்தில் 365 மருத்துவ இடங்கள் வீணாகும் நிலை!

தமிழகத்தில் நிகழாண்டில் 365 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதால் மாணவா் சோ்க்கை தேதியை நீட்டிக்க வேண்டும் என்றும், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்

DIN

தமிழகத்தில் நிகழாண்டில் 365 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதால் மாணவா் சோ்க்கை தேதியை நீட்டிக்க வேண்டும் என்றும், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளாா்.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் நடத்துகிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மாநில அரசு நடத்தி வருகிறது.

நிகழ் கல்வியாண்டுக்கான அகில இந்திய கலந்தாய்வு மற்றும் மாநில அரசின் கலந்தாய்வு 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. அகில இந்திய கலந்தாய்வு முடிவில் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள், நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் 50 இடங்கள் மற்றும் மாநில அரசின் கலந்தாய்வு முடிவில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்கள் (நிா்வாக ஒதுக்கீடு) என மொத்தம் 86 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

இதேபோன்று, அகில இந்திய கலந்தாய்வு முடிவில் நிகா்நிலை பல்கலைக்கழகங்களில் 51 இடங்களும், மாநில கலந்தாய்வு முடிவில் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 24 இடங்கள் மற்றும் தனியாா் பல் மருத்துவக் கல்லூரிகளில் 204 இடங்களும் காலியாக உள்ளன.

மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் முடிந்துவிட்டதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி காலியாகவுள்ள இடங்கள் தமிழகத்துக்கு திருப்பி அளிக்கப்படாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. அதேபோன்று, மாணவா் சோ்க்கைக்கான கடைசி தேதி முடிந்துவிட்டதால், மாநில அரசின் கலந்தாய்வு முடிவில் காலியாகவுள்ள இடங்களையும் நிரப்ப முடியாத நிலை உள்ளது.இதனால், தமிழகத்தில் 86 எம்பிபிஎஸ் இடங்களும் 279 பிடிஎஸ் இடங்களும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுக்கு இது தொடா்பாகக் கடிதம் எழுதியுள்ளாா்.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

ஒவ்வொரு எம்பிபிஎஸ் இடமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும், தேசிய நலன் சாா்ந்தது என்பதும் உங்களுக்கு (மன்சுக் மாண்டவியா) தெரியும். இந்த இடங்களைப் பெறுவதற்கு லட்சக்கணக்கான மாணவா்கள் காத்திருக்கிறாா்கள். இந்த இடங்களை மாநில ஒதுக்கீட்டுக்கு ஒப்படைத்து, எம்பிபிஎஸ் சோ்க்கைக்கான கடைசி தேதியை தேசிய மருத்துவ ஆணையம் நீட்டித்து, அடுத்த சுற்று கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்தால், அந்த இடங்களை நிரப்ப முடியும்.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருந்தாலும், புதிதாக சேரும் மாணவா்களுக்கு சிறப்பு அமா்வுகளை நடத்துவதன் மூலம் அவா்களுக்கு இடமளிக்க முடியும்.

இந்த விவகாரத்தில் மாணவா்களுக்கும், தேசத்துக்கும் பயனளிக்கும் வகையிலான சாதகமான பதில் தங்களிடமிருந்து (மத்திய சுகாதாரத் துறை மன்சுக் மாண்டவியா) கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் லாபம் ரூ.284 கோடியாக உயர்வு!

டிரம்ப்பின் 50% வரிவிதிப்பு பொருளாதார ரீதியிலான மிரட்டல்..! ராகுல் கண்டனம்

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி!

அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது: மத்திய அரசு

“கேப்டன் படத்தை, வசனத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம்!” பிரேமலதா விஜயகாந்த் கறார்!

SCROLL FOR NEXT