சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட் குழுமம் 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (இன்டர்நேஷனர் டெக் பார்க்) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, பல்லாவரம் ரேடியல் சாலையில், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிட்டாலாண்ட் குழுமத்தின் துணை நிறுவனமான ரேடியல் ஐடி பார்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துவரும் தொழில்நுட்ப பூங்காவில், முதற்கட்டமாக 1.3 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைத்துள்ள சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை (International Tech Park) திறந்து வைத்தார்.
இதையும் படிக்க.. கோலி பிறந்தநாள்: மறக்க முடியாததாக மாற்ற காத்திருக்கும் ஈடன் கார்டன்!
அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கையின் அடிப்படையில், கிராமப்புறங்களை சார்ந்த, படித்த இளைஞர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டங்களுக்கு அருகிலேயே அதிக எண்ணிக்கையிலான உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம், திருப்பூர், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி பரப்புள்ளதாக, மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், உதகமண்டலத்தில் புதுமையான அம்சங்களுடன் ஒரு மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேப்பிட்டாலாண்ட்(Capitaland) குழுமம் ஆசியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்றான கேப்பிட்டாலாண்ட் குழுமம், பல நாடுகளில், முப்பதுக்கும் மேற்பட்ட சில்லறை வணிகம், அலுவலக வளாகங்கள், தங்குமிடங்கள், வணிகப் பூங்காக்கள், போக்குவரத்து மேலாண்மை மற்றும் தரவு மையங்களை நிறுவியுள்ளது.
முன்னதாக அசென்டாஸ் (Ascendas) என அறியப்பட்ட கேப்பிட்டாலாண்ட், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் முதல் தனியார் தகவல் தொழில்நுட்ப வணிகப் பூங்காவை சென்னையில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இக்குழுமம் சென்னை தரமணியில் சர்வதேச தொழில்நுட்ப பூங்கா, செங்கல்பட்டு, மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் சைபர்வேல் (CyberVale) மற்றும் சென்னை, பல்லாவரம் ரேடியல் சாலையில் இன்று தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட சர்வதேச தொழில்நுட்ப பூங்கா என மூன்று வணிக பூங்காக்களைக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.