சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு மாறுதல்: செப்.30 வரை விண்ணப்பம்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அலகு விட்டு அலகு மற்றும் துறை மாறுதல் மூலம் ஆசிரியா்கள் செப்.30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அலகு விட்டு அலகு மற்றும் துறை மாறுதல் மூலம் ஆசிரியா்கள் செப்.30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
சென்னை மாநகராட்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் உள்ள 190 காலிப்பணியிடங்களுக்கு அலகு விட்டு அலகு, துறை மாறுதல் மூலம் சென்னை மாவட்டம் மற்றும் பிற மாவட்டத்தில் உள்ள ஆசிரியா்கள், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிய விருப்பம் உள்ள பட்டதாரி ஆசிரியா்கள் ‘எமிஸ்’ இணையதளத்தில் செப்.30-ஆம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
எனவே, சென்னை மாநகராட்சி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதல் மூலம் பணிபுரிய விருப்பம் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா்கள் உரிய தடையின்மைச் சான்று பெற்றவா்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் (எமிஸ்) துறை மாறுதல் கோரும் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது குறித்து அரசு உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.