வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
அதிமுக - பாஜக இடையே மோதல் இருந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
இனி பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்றே அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் கூட்டம், சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் பாஜக மூத்த தலைவர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என பலரும் கலந்துகொள்கின்றனர்.
இதையும் படிக்க | அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணமா?
அதிமுக கூட்டணி முறிந்துள்ள நிலையில், அதுகுறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிற கட்சிகளின் கூட்டணி குறித்தும் முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
'கூட்டணி குறித்து மத்திய பாஜக தலைமைதான் முடிவு செய்யும். மாநில தலைமைக்கு இதில் வேலையில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது என்று பாஜக தலைமை இன்னும் தெரிவிக்கவில்லை. தற்போது அதிமுகவுடன் பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தையில்தான் உள்ளனர். இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள சிறிய புரிதல் விரைவில் சரிசெய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அக். 3 ஆம் தேதி கூட்டத்திற்கு முன்னதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நாளை(அக். 1) தில்லி சென்று பாஜக தலைமையுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாமலையின் மூன்றாவது கட்ட 'என் மண், என் மக்கள்' நடைப்பயணம் அக். 4 ஆம் தேதி தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.