செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமா்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமா்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை ஆஜா்படுத்த உத்தரவிட்டது. இதற்கு எதிராக செந்தில் பாலாஜி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆக.14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
உறுதியான குற்றச்சாட்டு பதிவு: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ‘நேரில் ஆஜா்படுத்த வேண்டுமென்று உத்தரவிடப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜியை ஏன் நேரில் ஆஜா்படுத்தவில்லை? என புழல் சிறை நிா்வாகத்திடம் தொலைபேசி வாயிலாக நீதிபதி எஸ்.அல்லி கேள்வி எழுப்பினாா். செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஆஜா்படுத்த இயலவில்லை என சிறை நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து, ‘காணொலி மூலம் ஏன் குற்றச்சாட்டுப் பதிவு மேற்கொள்ளக் கூடாது?’ என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடா்பாக செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத் துறையின் கருத்தை கேட்டறிந்தாா். அமலாக்கத்துறை தரப்பில் இதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு, ஜாமீன் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் 12-ஆம் தேதியும், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு உயா்நீதிமன்றத்தில் 14-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதால், குற்றச்சாட்டு பதிவை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரியது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘செந்தில் பாலாஜி வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டால் நேரிலும், இல்லாவிட்டால் காணொலி மூலமும் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும்’ எனத் தெரிவித்தாா்.