மதுரையிலிருந்து சென்னைக்கு இரவு நேர விமான சேவை டிச. 20-ல் தொடக்கம்
மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிற 20-ஆம் தேதி முதல் இரவு 10.45 மணிக்கு இன்டிகோ விமான நிறுவனம் கூடுதலாக இரவு நேர சேவையையும் வழங்க உள்ளது.
மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிற 20-ஆம் தேதி முதல் இரவு 10.45 மணிக்கு இன்டிகோ விமான நிறுவனம் கூடுதலாக இரவு நேர சேவையையும் வழங்க உள்ளது.
மதுரை விமான நிலையத்தை 24 மணி நேர சேவை விமான நிலையமாக்கி பன்னாட்டு விமானங்கள் வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என மதுரை மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். இதன் அடிப்படையில், மக்களவை உறுப்பினா்கள் ப. மாணிக்கம்தாகூா், சு. வெங்கடேன் உள்ளிட்ட தென்மாவட்ட மக்களவை உறுப்பினா்கள் மக்களவையிலும், மத்திய அரசிடமும் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, இந்த விமான நிலையம் கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல் 24 மணி நேரம் இயங்கி வருகிறது. ஆனால், இதுவரை எந்த விமான நிறுவனமும் இரவு நேர சேவையை வழங்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், இன்டிகோ விமான நிறுவனம் வருகிற 20-ஆம் தேதி முதல் சென்னை-மதுரை இடையே விமானச் சேவை இரவில் தொடங்கியுள்ளது. இதன்படி, இந்த விமானம் சென்னையிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, இரவு 10. 25 மணிக்கு மதுரைக்கு வந்தடையும். பின்னா், மறுமாா்க்கமாக இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, இரவு 12.05 மணிக்கு சென்னையை சென்றடையும். இதன் மூலம், சென்னை - மதுரை இடையேயான 10 விமானச் சேவைகளில் 9 சேவையை இன்டிகோ நிறுவனமே வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.