ஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை? திருமாவளவன் பதில்
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்கச் சொன்னதே நான்தான் என்றார் திருமாவளவன்.
தமிழ்நாடுஆதவ் அர்ஜுனா மீது என்ன நடவடிக்கை? திருமாவளவன் பதில்
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்கச் சொன்னதே நான்தான் என்றார் திருமாவளவன்.
விஜய் பங்கேற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்கச் சொன்னதே நான்தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (டிச. 8) தெரிவித்தார்.
கட்சியில் உள்ளவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேர்ந்தால், தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவில் ஆலோசித்த பின்னரே பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம் எனக் குறிப்பிட்டார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது,
''எளிய மக்களை அமைப்பாக்கி வருகிற கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இதில் ஜனநாயகப்பூர்வமான முடிவுகளையே இதுவரை எடுத்துள்ளோம்.
மற்ற கட்சிகளைப் போன்று விசிக-வும் முடிவெடுக்க வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
விசிக தொடக்கத்தில் தலித் இயக்கம் என்ற அடையாளத்தோடு பொதுப்பணியில் ஈடுபட்டது.
அரசியல் இயக்கமாக மாற எடுத்துக்கொண்ட முயற்சியில் ஒன்றாக, சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் கட்சிப் பொறுப்பில் அங்கம் வகிக்க தீர்மானம் நிறைவேற்றினோம். இதனை வேளச்சேரி தீர்மானம் என்றே அழைக்கிறோம்.
இதன்படி, தலித் அல்லாதோரும் விசிக கட்சியில் முக்கிய பொறுப்புகளுக்கு விண்ணப்பித்து பொறுப்பேற்றனர். அவ்வாறு வந்தவர்தான் ஆதவ் அர்ஜுனா.
விசிகவில் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு 10 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அமைப்புச் செயலாளர் பொறுப்பு 10 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தலித் அல்லாதோரும் உண்டு.
தலித் அல்லாதோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேர்ந்தால், தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவில் ஆலோசித்து ஆய்வு செய்து பின்னரே பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்.
இதனை விசிக நடைமுறையாகவே கொண்டுள்ளது. மற்ற கட்சிகளைப் போன்று நாங்கள் செயல்பட வேண்டும் என நினைப்பது ஏற்புடையதல்ல.
ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து உயர்நிலைக் குழுவில் ஆலோசித்து முடிவு எடுப்போம். இது குறித்து விரைவில் அறிவிப்போம். தற்போது வரை ஆதவ் அர்ஜுனா கட்சிப் பொறுப்பில்தான் இருக்கிறார்.
அம்பேத்கர் பேத்தியின் கணவரான ஆனந்த் டெல்டும்டே மீது தீவிரவாத முத்திரை குத்துவது அநாகரிக அரசியல்'' என திருமாவளவன் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!