தமிழ்நாடு

தாமதமாகும் அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்கா!

மதுரையில் அரசு தகவல் தொழில் நுட்பப் பூங்கா திட்டம் தொடங்குவதில் ஏற்படும் தாமதத்தால் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ச.சந்தனக்குமார்

மதுரையில் அரசு தகவல் தொழில் நுட்பப் பூங்கா திட்டம் தொடங்குவதில் ஏற்படும் தாமதத்தால் 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தொழில் மையமாகவும் வேலைவாய்ப்புக்கு உயிர் நாடியாகவும் மதுரை திகழ்கிறது.

தமிழகத்தில் தொழில் புரட்சி மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்குடன் 2000-ஆம் ஆண்டில் அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதி சென்னையில் அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்காவை திறந்து வைத்தார். அப்போதுமுதல் அதிக வேலைவாய்ப்புகளை இந்தப் பூங்கா வழங்கி வருகிறது. கோவைக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக விழுப்புரம், திருப்பூர், தூத்துக்குடி தஞ்சாவூர், சேலம், வேலூர், உதகை ஆகிய இடங்களில் சிறு தொழில்நுட்பப் பூங்கா (மினி டைடல் பார்க்) அமைக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் தொழில்நுட்பப் பூங்கா: இதேபோல, மதுரையில் 2022-ஆம் ஆண்டு, செப்டம்பரில் நடைபெற்ற 'தோள் கொடுப்போம் தொழில்களுக்கு' என்ற மாநாட்டில் மதுரையில் அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முதல் கட்டமாக, மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் 5.6 ஏக்கர் பரப்பளவில் ரூ. 600 கோடியில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்றும், இரண்டாவது கட்டமாக கூடுதலாக 5 ஏக்கரில் ரூ. 600 கோடியில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை மாநகராட்சியில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தப் பூங்கா மதுரை மாநகராட்சி நிர்வாகம், டைடல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இத்தகைய சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்த மாட்டுத்தாவணி அருகே உள்ள இடம் ஏற்கெனவே நிரந்தர தினசரி காய்கறிச் சந்தை அமைப்பதற்காக 2010-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் மு.சுருணாநிதி அறிவிப்பிற்கிணங்க ஒதுக்கப்பட்டது.

மத்திய அரசு ரூ. 55 கோடி, மாநில அரசு ரூ. 30 கோடி என மொத்தம் ரூ. 85 கோடியில் வேளாண் துறை, மதுரை மாநகராட்சி இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

அடுக்குமாடி கட்டடம் கட்ட முடியாது: பின்னர், கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைப்பதற்கு காய்கறிச் சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. அப்போது, வியாபாரிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்து, அந்த இடத்தில் காய்கறிச் சந்தையைத் தவிர வேறெந்தக் கட்டடமும் கட்டக் கூடாது என இடைக்காலத் தடை ஆணை பெற்றனர். தொடர்ந்து, மதுரை மாநகராட்சி மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில், இடைக்காலத் தடையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியது.

இதையடுத்து மீண்டும் அதே இடத்தில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியது. முதல் கட்டமாக, மாட்டுத் தாவணி அருகே உள்ள இடத்தில் மாநகராட்சி அலுவலர்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்கா நிறுவன அலுவலர்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இடம் நீர்பிடிப்புப் பகுதியாக இருப்பதால், அடுக்குமாடிக் கட்டடம் கட்டுவதற்கு உகந்ததாக இருக்காது என ஆய்வில் தெரிய வந்தது. எனவே, அரசு தொழில்நுட்பப் பூங்காவை மதுரை அருகேயுள்ள கருப்பாயூரணி பகுதிக்கு இடமாற்றம் செய்யலாமா என அலுவலர்கள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

வேலைவாய்ப்பு கேள்விக்குறி: மதுரையில் அரசு தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைந்தால், நவீன வசதிகளுடன் கூடிய தரமான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுவது மட்டுமன்றி,10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிலையில், திட்டம் அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் இடம் தேர்வு செய்வதில் குளறுபடி நிலவுகிறது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்கு மதுரை மாநகராட்சியும், தமிழக அரசும்தான் காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்தத் தாமதத்தால், 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தமிழக அரசும், மதுரை மாநகராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து, அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நிதி நிலைமை அடிப்படையில்...

அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான பணிகள்,நிதி நிலைமை அடிப்படையில் விரைவில் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். இது குறித்து மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது:

மாட்டுத்தாவணி அருகே ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மாநகராட்சி அலுவலர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவன அலுவலர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர்.

மண் பரிசோதனையும் நடைபெற்றது. அரசு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான பணிகள்,நிதி நிலைமை அடிப்படையில் விரைவில் தொடங்கப்படும். நிரந்தர காய்கறிச் சந்தைக்குத் தேர்வு செய்த இடம் வேறு; தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்குத் தேர்வு செய்யப்பட்ட இடம் வேறு என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக மாநாடு: 200 செவிலியர்கள் உள்பட 600 பேர் கொண்ட மருத்துவக் குழு!

பக்தா்கள் பணத்தில் மட்டுமே கோயில் திருப்பணிகள் நடைபெறுகின்றன: இந்து முன்னணி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி!

திண்டுக்கல் மாவட்டத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை: கொடைக்கானலில் உணவக உரிமையாளா் கைது

SCROLL FOR NEXT