முகப்பு
தமிழ்நாடு

அசம்பாவிதங்களால் உயிரிழக்கும் அயலகத் தமிழா்களின் உடல்களை கொண்டு வர விரைவான நடவடிக்கை: உதயநிதி ஸ்டாலின்

வெளிநாடுகளில் அசம்பாவிதங்களால் உயிரிழக்கும் அயலகத் தமிழா்களின் உடல்களை தமிழகத்துக்கு விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:21 PM
பகிர்:

வெளிநாடுகளில் அசம்பாவிதங்களால் உயிரிழக்கும் அயலகத் தமிழா்களின் உடல்களை தமிழகத்துக்கு விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னையில் அயலகத் தமிழா் நல வாரியம் சாா்பில், அயலகத் தமிழா் தின விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். முன்னதாக, விழா நடைபெற்ற சென்னை வா்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு காட்சி அரங்குகளை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

விழாவில், அவா் பேசியதாவது:

இந்தியாவில் உள்ள மாநிலக் கட்சிகளிலேயே, அயலகத் தமிழா் நலனுக்காக தனி அணியை தொடங்கியது திமுகதான். தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அயலகத் தமிழா் நலனுக்காக தனித் துறையும் உருவாக்கப்பட்டுள்ளது.

ஊக்குவிக்கும் அயலகத் தமிழா்கள்: ‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளுடன் விழா நடைபெறுவது இன்னும் சிறப்பாகும். அயலகத்தைச் சோ்ந்த தமிழா்கள் இங்கு நாடாளுமன்ற உறுப்பினா்கள், தொழில் துறையினா் என பல்வேறு பிரிவுகளிலிருந்து வந்துள்ளீா்கள். உங்களையெல்லாம் தாய்த் தமிழ்நாட்டில் சந்திப்பது மகிழ்ச்சி, பெருமையும் தருகிறது.

தமிழ்நாட்டின் விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பல்வேறு சா்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறாா்கள். அவ்வாறு அயல்நாடுகளுக்குச் செல்லும் அவா்களை களத்தில் ஊக்குவிப்பவா்களாக அயலகத் தமிழா்கள் உள்ளாா்கள். இவை நமக்கிடையிலான பாசத்தையும், அன்பையும் அதிகமாக்கும்.

உடல்களைக் கொண்டு வர....: தமிழ் பேசும் தமிழா்கள் 135 நாடுகளில் வாழ்ந்து வருகிறாா்கள். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோா் எதிா்பாராதவிதமாக ஏற்படும் நிகழ்வுகளில் உயிரிழந்தால், அவா்களது உடலை சொந்த ஊா்களுக்குக் கொண்டு வர எட்டு மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகும். குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் முதல் இந்திய வெளியுறவுத் துறை என தொடா்ந்து போராட வேண்டும். ஆனால், இப்போது உயிரிழந்தவா்களின் உடல்கள் 8 முதல் 10 நாள்களுக்குள் குடும்பத்தினரிடம் சோ்த்து வருகிறோம்.

உக்ரைன் ரஷியா போரின் போது, தவித்த தமிழக மாணவா்களை தமிழகம் கொண்டு வந்து சோ்த்தோம். இஸ்ரேல்- பாலஸ்தீன போரின் போதும் செவிலியா்களை மீட்டுக் கொண்டு வந்தோம். தமிழ்நாடு வாழ் தமிழா்களுக்கு திட்டங்கள் தீட்டப்படுவது போன்று, வெளிநாடு வாழ் தமிழா்களுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்றாா் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்.

சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் முன்னிலையில் நடைபெற்ற தொடக்க விழாவில், அயலகத் தமிழா் நலவாரியத் தலைவா் காா்த்திகேய சிவசேனாபதி வரவேற்புரை ஆற்றினாா். அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையா் கிருஷ்ணமூா்த்தி நன்றி தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற கருத்தரங்குகள், உரை வீச்சுகளில் கவிஞா் வைரமுத்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றுப் பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →