தமிழ்நாடு

அயோத்தி அரசியல் இந்தியாவில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது: கே.எஸ்.அழகிரி

DIN

கும்பகோணம்: அயோத்தி ராமர் கோயில் அரசியல் இந்தியாவில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். 

கும்பகோணம் அருகே திருப்பனந்தாளை அடுத்த தத்துவாஞ்சேரியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், சுதந்திரப் போராட்ட வீரருமான டி.ஆர். ராமாமிர்த தொண்டைமான் சிலையை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த அவர் அளித்த பேட்டி:

அயோத்தி ராமர் கோயில் அரசியல் இந்தியாவில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அயோத்தியில் 3 ஆயிரத்து 201 ராமர் கோயில்கள் உள்ளன. இந்தியாவில் எந்தப் பகுதியில் குடமுழுக்கு விழா நடைபெற்றாலும் அந்தப் பகுதி  விசேஷமாகத்தான் இருக்கும்.  

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ராமர் கோயில் வேண்டாம் என இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கூடச் சொல்லவில்லை.

பாபர் மசூதியை பாஜகவினர் இடித்துவிட்டு அந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவதாகக் கூறினர். அயோத்தியில் எங்கே வேண்டுமானாலும் ராமர் கோயில் கட்டலாம் என சொன்னோம். ஆனால் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோயில் கட்டவில்லை. மூன்று கிலோ மீட்டருக்கு அப்பால் கட்டி இந்திய மக்களைத் திறமையாக நம்ப வைத்துள்ளனர்.

500 ஆண்டுக் கால அவமானங்கள் துடைக்கப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர். இந்துகளுக்கு எப்போது அவமானம் ஏற்பட்டது. 300 ஆண்டுகளுக்கு மேல் முகலாய, ஐரோப்பிய அரசு ஆண்டபோது, இந்துக்கள்தான் பெரும்பான்மையாக இருந்தனர். இந்துக்கள் தாங்களாகவே வளர்த்துக் கொண்டனர். நாங்கள்தான் வளர்த்தோம் எனக் கூறிக் கொள்வதற்கு ஆர்.எஸ்.எஸ். யார்? 

கோயில் கும்பாபிஷேகத்தை அரசியல் ஆக்குகின்றனர். இதனால் இந்து மதத்துக்கோ, ராமருக்கோ எந்தப் பெருமையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் மனைவியைக் கூட கவனிக்க முடியாத ஒருவர் ராமர் சிலையைப் பிரதிஷ்டை செய்வது தவறு என்றார் அழகிரி.

அப்போது, ம.தி.மு.க முதன்மைச் செயலர் துரை. வைகோ, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.ஆர். லோகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆனி ராஜா எழுப்பும் கேள்வி!

தலைகுப்புற கவிழ்ந்த அரசு நகரப் பேருந்து -42 போ் காயம்

நடால், கசாட்கினா வெற்றி

அதானிக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியவா் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கால்நடைகளின் முக்கிய தீவனமாக மாறிவரும் புதிய சைலேஜ்

SCROLL FOR NEXT