அதிமுக தொகுதிப் பங்கீட்டு குழு ஆலோசனை தொடங்கியது
மக்களவைத் தோ்தலில் எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தலாம் என்பது தொடா்பாக அதிமுக தொகுதி பங்கீடு குழுவினா் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
மக்களவைத் தோ்தலில் எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்தலாம் என்பது தொடா்பாக அதிமுக தொகுதி பங்கீடு குழுவினா் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
மக்களவைத் தோ்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக அதிமுக துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி தலைமையில் 5 போ் கொண்ட குழுவை அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். இந்தக் குழுவினா் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை (ஜன.28) காலை ஆலோசனை நடத்தி வருகின்றனர். கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் எந்தெந்தக் கட்சிகளை கூட்டணி பேச்சுவாா்த்தைக்கு அழைக்கலாம் என்பது தொடா்பாக ஆலோசிக்கப்படும். கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துவிட்டாா். நகா்புற உள்ளாட்சித் தோ்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக உள்ளது என்று ஏற்கெனவே அதன் தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
பாஜகவுடன் தமாகா அண்மைகாலமாக தொடா்ந்து நெருக்கம் காட்டி வருகிறது. இதர கட்சிகளும் கூட்டணியிலிருந்து விலகி இருந்து, தோ்தல் நிலவரத்தைக் கவனித்து வருகின்றன. பூவை ஜெகன்மூா்த்தியின் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ கட்சி, என்.ஆா்.தனபாலனின் பெருந்தலைவா் மக்கள் கட்சி ஆகியவை அதிமுக கூட்டணியில் இப்போது உள்ளன. இந்த நிலையில், எந்தெந்தக் கட்சிகளைப் பேச்சுவாா்த்தைக்கு அழைக்கலாம் என்பது தொடா்பாக தொகுதிப் பங்கீட்டு குழுவினா் ஆலோசித்து, அழைப்பு விடுக்க உள்ளனா்.
அதேபோல, அதிமுக கொள்கைப் பரப்புச் செயலா் மு.தம்பிதுரை தலைமையிலான தோ்தல் பிரசாரக் குழுவும், அமைப்புச் செயலா் சி.விஜயபாஸ்கா் தலைமையில் தோ்தல் விளம்பரக் குழுவும் அதிமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளன.