செங்கோலுக்கும் மத்தியிலுள்ள இன்றைய ஆட்சிக்குமான பொருத்தபாடு பற்றிக் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யான சு. வெங்கடேசன்.
குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான சு.வெங்கடேசனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். இந்தப் பேட்டியை விமர்சித்துத் தனது எக்ஸ் பக்கத்தில், வெங்கடேசன் கருத்திட்டுள்ளார்.
“செங்கோல் என்பது ஒன்று மன்னராட்சியின் குறியீடு. இரண்டாவது நேர்மையின் குறியீடு. நேர்மைக்கும் பா.ஜ.க.வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? தமிழ்நாடு தேர்தல் முடியும் வரை தமிழர்களைப் பாராட்டிப் பேசிவிட்டு, தேர்தல் முடிந்தவுடன் உ. பி.யிலும் ஒடிசாவிலும் தமிழர்களை அவமானப்படுத்தியவர்கள்தானே நீங்கள்” என்று பேசினேன்.
ஆனால் நீங்களோ “செங்கோல் அறத்தின், நேர்மையின் குறியீடு” என்று நான் சொன்னதை வசதியாக மறைத்துவிட்டு மன்னராட்சியின் குறியீடு என்பதையும் மன்னர்கள் தங்களது அந்தப்புரத்தில் பெண்களை அடிமையாக வைத்திருந்தனர் என்பதையும் மட்டும் விமர்சித்திருக்கிறீர்கள்.
செங்கோல், அறத்தின், நேர்மையின் குறியீடு என்பதைப் பற்றிப் பேசாமல் தவிர்த்ததன் மூலம் பா.ஜ.க.வின் நேர்மையின்மையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்களை அறவழிப்படுத்துவதும் நீதியின்பால் ஆட்சிசெய்ய வைப்பதும்தான் காலங்காலமாக இருந்துவரும் பெரும் பிரச்னை. அதனால்தான் அறத்தின் குறியீடாக செங்கோலைத் தமிழ் இலக்கியங்கள் பேசின.
“வம்ப வேந்தர்களாகவும், பிறர் மண் உண்ணும் செம்மல்களாகவும்” மன்னர்கள் தான்தோன்றித்தனமாக ஆட்சி நடத்தியபோது அவர்களைக் கொடுங்கோல் ஆட்சி நடத்தாதீர்கள் என இலக்கியங்கள் இடித்துரைத்தன. நீதி மற்றும் அறத்தின் குறியீடாக ”செங்கோல்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
மன்னராட்சிக் காலம் முடிந்துவிட்டது. ஜனநாயக காலத்திற்கு வந்துவிட்டோம். நமக்கான நீதியின் அடையாளமாகவும் அடிப்படையாகவும் நமக்கு நாமே உருவாக்கிக்கொண்டதுதான் இந்திய அரசியல் சாசனம்.
நாடாளுமன்ற வாசலில் இருந்த காந்தியின் சிலையையும் அம்பேத்கரின் சிலையையும் அகற்றிவிட்டு, எங்கோ ஓர் அருங்காட்சியகத்திலிருந்த செங்கோலை எடுத்துவந்து அவையின் மையத்தில் நிறுவுகிறீர்கள்.
நாடாளுமன்றத்தில் நாற்பதடி உயரத்திற்கு சாணக்கியனின் உருவத்தைப் பொறிப்பதும் நாடாளுமன்றத்தின் ஆறு வாசலுக்கும் சமஸ்கிருதத்தில் பெயர்சூட்டுவதும் தற்செயல் அல்ல. உங்களது இந்துத்வ மதவெறித் தத்துவம் உங்களை வழிநடத்துகிறது. அதற்குத் தடையாக இருக்கும் அரசியல் சாசனத்தை நீங்கள் அகற்ற நினைக்கிறீர்கள்.
இந்திய மக்கள் அனைவருக்குமான சட்டங்கள் இயற்றப்படும் மாமன்றத்தில் நமது அரசியல் சாசனமும் அது சார்ந்த அடையாளங்களுமே கோலோச்ச வேண்டும். அங்கே மன்னராட்சிக் கால அடையாளத்தைக் கொண்டுவந்து நிறுவுவது நமது ஜனநாயக அமைப்பின் மீதான திட்டமிட்ட கருத்தியல் தாக்குதல் ஆகும்.
எனவேதான் நாங்கள் அரசியல் சாசனத்தைக் கைகளில் ஏந்தி 18 ஆவது நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தோம். அதனை உயர்த்திப் பிடித்துப் பதவியேற்றுக்கொண்டோம். “நீங்கள் அழிக்க நினைப்பதைக் காப்பாற்றத்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்” என்று நாடாளுமன்றத்தில் முழங்கினோம்.
மதுரை மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றபொழுது அவரிடம் கொடுக்கப்பட்டது குடியாட்சியின் குறியீடான இந்திய அரசுச் சின்னம் பொறிக்கப்பட்ட செங்கோல்; நாடாளுமன்றத்தில் உள்ளதைப் போன்று மத அடையாளங்கொண்ட செங்கோல் அல்ல.
நீங்கள் நாளையே மதுரை மாநகராட்சியின் கூட்ட அரங்கிற்கு செல்லுங்கள். அங்கு அச்செங்கோல் இருக்காது. அது கருவூல அறையில் வைக்கப்பட்டிருக்கும். செங்கோலைக் குறியீடாக பயன்படுத்துவதற்கும் அதனை அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக நிலைநிறுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.
பெரியோரை வணங்குதல் என்பது வேறு. மக்களவையில் எல்லோரையும்விடப் பெரியவர் அவைத் தலைவர்தான் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்பது வேறு. பண்பாட்டின் பெயரைச் சொல்லி சட்ட விதிகளை நிராகரிக்கும் உரிமையை ஒவ்வொருவரும் கையிலெடுத்தால் இந்த நாட்டின் நிலை என்னவாகும்?
எல்லாவற்றையும்விட உயர்ந்தது அரசியல் சாசனமும், அது உருவாக்கியுள்ள ஜனநாயக விதிகளும்தான் என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சாணக்கியனின் மூலமும் செங்கோலின் மூலமும் தாக்குதலை நடத்துகிறார்கள்.
அந்தத் தாக்குதலை எதிர்கொள்ளும் வல்லமையும் முதிர்ச்சியும் இந்திய ஜனநாயகத்திற்கு உண்டு. அதன் வெளிப்பாட்டில் ஒன்றுதான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவு.
ஆனால் இந்த 18 ஆவது நாடாளுமன்றத்திற்கு வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய பிரச்னை வந்து நிற்கிறது. தெய்வப் பிறவி என்று தன்னை கருதிக்கொள்ளும் ஒருவர், மன்னராட்சிக் கால அடையாளத்தை கொண்டுவந்து வைத்துக்கொண்டு ஜனநாயக நாட்டின் பிரதமராக வீற்றிருக்கிறார்.
ஒரே நேரத்தில் தன்னைத் தெய்வப்பிறவியாக நம்பி, மன்னராகவும் உணர்கிற ஒரு பிரதமருடன் இந்த நாடு போராடிக்கொண்டிருக்கிறது. எங்கள் போராட்டத்தின் உண்மையையும் நேர்மையையும் மக்கள் அறிவார்கள்.
நீங்கள் எனது எழுத்தின் வாசகர் என்று கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி. எனது இரண்டு நாவல்களிலும் காலம்தான் கதாநாயகன். அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்துகொண்டு நான்தான் எல்லாமுமாக இருக்கிறேன் என உலகுக்கு அறிவித்துக்கொண்டவர்களை எல்லாம் காலநதி ஒரு கூழாங்கல்லைப் போல உருட்டி எங்கோ கொண்டு சென்றுள்ளது.
வரலாற்றுச் சக்கரம் எப்போதும் முன்னோக்கியே நகரும். காலத்தைப் பின்னுக்கிழுக்க நினைப்பவர்களின் அகந்தை நிலைக்காது. இது சாணக்கிய நீதி காலம் அல்ல. சமூகநீதியின் காலம், சமத்துவத்தின் காலம்’’ என்று குறிப்பிட்டுள்ளார் வெங்கடேசன்.
மக்களவையில் நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வெங்கடேசன் பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டியொன்றில், ``வெங்கடேசனும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் முன்னொரு சமயத்தில் வேறொரு செங்கோலை ஒரு பெண் மேயரிடம் ஒப்படைக்கும் புகைப்படத்தை காட்டி, இந்த படத்தின் மூலம் வெங்கடேசன் தெரிவிப்பது என்னவென்றால், அவர் இந்த பெண் மேயரை அடிமைப்படுத்துகிறார் என்பதைக் குறிக்கிறதா? வெங்கடேசன் செங்கோலை வழங்கலாம்; ஆனால், பிரதமர் மக்களவையில் செங்கோலை நிறுவக் கூடாது என்பது போல பேசுகிறார்” என்று கூறியிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.