முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூரில் பட்டப்பகலில் தொழிலதிபர் வெட்டிக் கொலை

Updated On : 9 ஜூன், 2024 at 2:42 PM
தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்ட பாபு வந்த கார்.
பகிர்:

தஞ்சாவூரில் திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூரைச் சேர்ந்தவர் கே. பாபு (48). திமுகவைச் சேர்ந்த தொழிலதிபரான இவர் காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். இவர் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் பங்கேற்பதற்காக காரில் தனது மகன்

பாலாவுடன் திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு முற்பகல் வந்தார். தஞ்சாவூர் ஞானம் நகருக்கு வந்தபோது காரை விட்டு இறங்கி மொய் கவர் வாங்கிவிட்டு மீண்டும் காரில் ஏறினார்.

Advertisement

அப்போது எதிரே வந்த கார் இவரது காரை வழி மறித்து நிறுத்தி ஒலிப்பானை எழுப்பியது. காரை விட்டு இறங்கி வந்து கேட்ட பாபுவை எதிரே வந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனால் பலத்த காயமடைந்த பாபு நிகழ்விடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி. ஜெயச்சந்திரன், துணைக் கண்காணிப்பாளர்கள் நித்யா, பி.என். ராஜா உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொழில் போட்டி காரணமாக தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக திருவாரூர் மாவட்டம், வைப்பூர் காவல் நிலையத்தில் பாபு ஏற்கனவே புகார் செய்திருப்பதும், அதன் காரணமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதன் அடிப்படையில் தாலுகா காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.