தமிழகத்தில் ஜூன் 22, 23 தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று(ஜூன் 19) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதோடு, ஜூன் 22ல் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைபகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 23-ல் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம் மற்றம் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேசமயம் அடுத்த ஐந்து நாள்களுக்கு (ஜூன் 23) வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை/இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்கள் ஜூன் 23 வரை மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.