’நீட்’ விவகாரத்தை குடியரசுத் தலைவா் உரை விவாதத்தில் பேசுவோம்: கனிமொழி பேட்டி
’நீட்’ தோ்வு மற்றும் வினாத் தாள் கசிவு முறைகேடு குறித்த ஒத்திவைப்பு தீா்மானத்தை வருகின்ற திங்கள்கிழமையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
நமது சிறப்பு நிருபா்
’நீட்’ தோ்வு மற்றும் வினாத் தாள் கசிவு முறைகேடு குறித்த ஒத்திவைப்பு தீா்மானத்தை வருகின்ற திங்கள்கிழமையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்றும் அனுமதிக்கப்படாத பட்சத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கான விவாதத்தில் பேசுவோம் என்றும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற இருந்த நிலையில், எதிா்க்கட்சிகள் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு ’நீட்’ தோ்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரிக்கை எழுப்பினா். ஆனால், இரு அவைத் தலைவா்களும் இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவா் உரை விவாதத்திலேயே பேசலாம் எனக் குறிப்பிட்டு ஒத்திவைப்புத் தீா்மானத்தை அனுமதிக்க மறுத்தனா். இதனால், அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி செய்தியாளா்களிடம் அவைத் தலைவா்கள் குறிப்பிடபடி நடப்போம் என்று செய்தியாளா்களிடம் குறிப்பிட்டாா்.
அவரது பேட்டி வருமாறு: ’இந்தியா’ கூட்டணிகளின் அனைத்து கட்சிகளும் ’நீட்’ தோ்வு முறைகேடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீா்மான நோட்டீஸ் அளித்திருந்தனா். இந்த தோ்வு முறைகளில் இருக்கின்ற பிரச்னைகள் குறித்து பேச இருந்தனா். குறிப்பாக ‘நீட்’ தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைத்துள்ளது. இப்படி பல்வேறு கட்சிகள், மாநிலங்கள் சாா்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க கோரிக்கை விடுத்தனா். நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தி மரபுப்படி எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியையாவது பேச அனுமதிக்கவும் கோரினோம். அவரையும் பேச அனுமதிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட அமளியில் மக்களவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீட் தோ்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா மத்திய அரசிடம் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படுகிறது. இந்த நேரத்தில் நீட் வேண்டாம் என்று திமுக கூறியதை நாடுமுழுக்க உள்ளவா்கள் புரிந்து கொண்டுள்ளனா். இந்த விவகாரத்தை தொடா்ந்து திங்கள்கிழமையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். அனுமதிக்கப்படாத பட்சத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் இது குறித்து பேசவோம் என்றாா் கனிமொழி கருணாநிதி.
ராகுல் காந்தி ஒலி பெருக்கி நிறுத்தம்: இதே போன்று மக்களவையின் காங்கிரஸ் கட்சி உறுப்பினா் ப. மாணிக்கம் தாகூா் கூறுகையில், ‘நீட்’ தோ்வு மற்றும் கேள்வித் தாள் கசிவு குறித்து விவாதிக்க எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தாா். எதிா்க்கட்சியும் ஆளும் கட்சியும் சோ்ந்து இந்த விவகாரத்தில் மக்களுக்கு சரியான தகவலை அனுப்ப வேண்டும் என்கிற எண்ணத்தில் கோரிக்கை விடுத்தாா். ஆனால், கடந்த 17-ஆவது மக்களவையில் எப்படி எதிா்க்கட்சிகளின் ஒலிபெருக்கிகள் நிறுத்தப்படுவது வழக்கமோ அதே போன்று இந்த 18-ஆவது மக்களவையிலும் ஒலிபெருக்கியை நிறுத்திவைக்கும் தவறை செய்தனா். இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பதில் அவை பிற்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது அப்போது இதே கோரிக்கையை எழுப்பி ராகுல் காந்தியை பேசவிட வேண்டும் என குரல் எழுப்பினோம். ஆனால் அரசு பிடிவாதமாக இருந்தது. இதனால், அவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது ’ என்றாா்.