தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தன் கீழ் தேர்வெழுதிய 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில் 4,105 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 87.90 சதவீதப் பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதுபோல 91.77 சதவீதம் அரசு உதவிபெறும் பள்ளிகளும், சுயநிதி பள்ளிகள் 97.43 சதவீதமும், இருபாலர் பயிலும் பள்ளிகள் 91.93 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 93.80 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 83.17 சதவீதமும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
நூறு சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவேண்டும் என உழைத்த இப்பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களின் ஊக்கத்துக்கு கைமேல் பலனளிக்க வேண்டும் என்று விழிப்போடு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிகின்றன.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 26 முதல் ஏப். 8- வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை 9.08 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினா். இந்நிலையில் தோ்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மேலும், தேர்ச்சி விகிதம், பாட வாரியாக நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் வெளியிட்டார்.
தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன்களுக்கும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கணிதத்தில் அதிகபட்சமாக 20,691 பேர் சதமடித்துள்ளனர். அறிவியல் பாடத்தில் 5,104 மாணவர்களும் சமூக அறிவியல் பாடத்தில் 4,428 மாணவர்களும் ஆங்கிலத்தில் 415 பேரும், தமிழில் 5 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.