சென்னை: தமிழகத்தில் உள்ள எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயங்கப்படும் காலாவதியான மாநகரப் பேருந்துகள் மாற்றப்படாமல் இருக்க கரோனா பொதுமுடக்கமே காரணம் என்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்.
தமிழகம் முழுவதும் காலாவதியான பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்கிறார்.
செவ்வாயன்று, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, உடைந்துபோன பழைய பேருந்துகள் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் போதிய பராமரிப்பில்லாமல், பயணிகளின் உயிர்களை பலிவாங்கக் காத்திருப்பதாகக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் சிவசங்கர், புதிதாக 7,682 பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் பல்வேறு நிலைகளில் உள்ளது. அனைத்தும் முடிவடைந்து 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் புதிய பேருந்துகள் சாலையில் ஓடும். ஒவ்வொரு மாதமும் 300 புதிய பேருந்துகள் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் சேர்க்கப்படும். கூடுதலாக மின்சாரத்தில் இயங்கும் 1000 பேருந்துகளை சென்னையில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ஆறு ஆண்டுகள் பழமையான 1,500 பேருந்துகள், தற்போது சீரமைப்புப் பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவை சீரமைக்கப்பட்டு மீண்டும் இயக்கப்படும் என்றும் சிவசங்கர் தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பேருந்துகளால் ஏற்படும் சாலை விபத்துகளில் 1,201 பேர் கொல்லப்பட்டனர். ஆனால், பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படுவதால் பலி எண்ணிக்கை தற்போது 911 ஆகக் குறைந்துள்ளது என்றார். அதுபோல, போக்குவரத்துத் துறைக்கு அரசு அளிக்கும் கடன் உதவித் தொகையும் குறைக்கப்பட்டிருப்பாதாகவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.