திருப்பரங்குன்றம்: திருநகர் உச்சிக் கருப்பணசாமி திருக்கோயில் கனி மாற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநகர் உச்சிக் கருப்பணசாமி திருக்கோயிலில் சுவாமிக்கு உருவம் கிடையாது. நாலரை அடி உயரம் உள்ள அரிவாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது. ஆண்கள் மட்டுமே வழிபடக்கூடிய இந்த கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை வைகாசி மாதம் கனி மாற்று விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கனி மாற்று விழா வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் உச்சி வேளையில் நடைபெற்றது.
முன்னதாக சுவாமிக்கு திருப்பரங்குன்றம் கோயில் வீட்டில் இருந்து பூஜைப் பொருள்கள், 3 ஆயிரம் வாழைப் பழங்கள், 500 மாம்பழங்கள், 500 பலாச்சுளைகள் ஆகியவற்றை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பழங்களை கோயில் சுவாமிக்கு படைத்து சிறப்புப் பூஜை செய்யப்பட்டது.
இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் மா, பலா, வாழைப் பழங்கள் பிரசாதங்களாக கொடுக்கப்பட்டது.
வழங்கப்படும் பழங்களை பக்தர்கள் அங்கேயே சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும். விபூதி, சந்தனம் உள்ளிட்டவைகளைக் கூட அழித்து விட்டுத்தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது வழக்கமாக நடைபெற்று வருகிறது.
படவரி: திருநகரில் உச்சி கருப்பணசாமிக்கு மா, பலா, வாழை என முக்கனிகள் கொண்டு நடைபெற்ற சிறப்பு பூஜை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.