தீபாவளிக்கு தித்திப்பான செய்தி: நாளை முதல் முழுமையான பறக்கும் ரயில் சேவை!
தீபாவளிக்கு தித்திப்பான செய்தியாக நாளை முதல் முழுமையான பறக்கும் ரயில் சேவை தொடங்குகிறது.
சென்னை: பறக்கும் ரயில் சேவை சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே ரத்து செய்யப்பட்டு 14 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், நாளை முதல் முழுமையாக இயக்கப்படும் என தீபாவளிக்கு தித்திப்பான செய்தியாக வந்திருக்கிறது.
வடசென்னையிலிருந்து வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றும் ஏராளமானோர், ஒரே ரயிலில் இதுவரை பயணித்து வந்த நிலையில், கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே பறக்கும் ரயில் ரத்து செய்யப்பட்டதால் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருந்தனர். இந்த துயரத்துக்கு இன்றுடன் விடைகொடுக்கலாம். நாளை முதல் சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை வழக்கம் போல செயல்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணிக்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியுடன் இந்த சேவை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே ரத்து செய்யப்பட்டது.
ரயில் சேவை நிறுத்தப்பட்டபோது, ஏழு மாதங்களில் பணி முடிந்து ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என கூறப்பட்டது. பிறகு பணியில் தொய்வு காரணமாக அக்டோபர் 1ஆம் தேதிக்குள் பணி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பணி நிறைவடையாமல் நீட்டித்துக்கொண்டே இருந்ததால் மக்கள் மிகுந்த அவதியடைந்துவந்தனர். தற்போது பணி முடிந்து வழக்கம் போல ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
எழும்பூர் - கடற்கரை இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததால், இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க அனுமதி கிடைத்துள்ளது.
திருவள்ளூர், அரக்கோணம், ஆவடியிலிருந்து வருவோர் வழக்கமாக வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயிலில் ஏறிவிட்டால் போதும். ஆனால், இதுவரை, அவர்கள் சென்னை சென்டிரல் செல்லும் ரயிலில் வந்து இறங்கி, அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
நாளை முதல், ஒரே ரயிலில், அரக்கோணம், ஆவடியிலிருந்து வேளச்சேரி வரை பயணிக்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.