இருவரும் எப்போது சைக்கிள் ஓட்டுவோம்: ஸ்டாலினுக்கு ராகுல் கேள்வி!
சிகாகோவில் சைக்கிள் ஓட்டுவதைப் போன்ற விடியோவை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பகிர்ந்திருந்தார்.
சென்னையில் எப்போது நாம் இருவரும் ஒன்றாக சைக்கிள் ஓட்டுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிகாகோவில் சைக்கிள் ஓட்டுவதைப் போன்ற விடியோவை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப். 4) காலை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த விடியோவைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, சகோதரரே, சென்னையில் நாம் இருவரும் ஒன்றாக எப்போது சைக்கிள் ஓட்டுவோம் என்று கேட்டுள்ளார். இந்த விடியோவுக்கு கட்சித் தொண்டர்கள், மக்கள் என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ராகுல் காந்தியின் இனிப்பான பழக்கம்
பொதுவெளியில் ராகுல் காந்தியின் சில சகஜமான நடவடிக்கைகள் அவ்வபோது மக்களைக் கவரும் வகையில் அமைவதுண்டு.
சமீபத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டிற்கு வந்த ராகுல் காந்தி, தனது நண்பர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்குவதற்காக கடைக்குச் சென்று இனிப்புகளை வாங்கினார். நேரில் சந்திக்கும்போது அதனை மு.க. ஸ்டாலினிடம் அன்புடன் வழங்கினார்.
இனிப்புகளை வாங்கும்போது பணத்தை தனே கொடுத்த ராகுல் காந்தி, சற்றும் யோசிக்காமல் “என் சகோதரர் ஸ்டாலினுக்கு தான்” என்று பதிலளித்தார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது.