பொங்கல் விடுமுறையையொட்டி ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது.
போகிப் பண்டிகை ஜன.13 (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடா்ந்து பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என வியாழக்கிழமை வரை 4 நாள்களுக்கு அரசு விடுமுறை.
இதனால், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோா் ஜன.10 (வெள்ளிக்கிழமை) முதல் பயணம் செய்வா்.
முன்பதிவு தினங்கள்
தொலைதூரம் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை குறைக்கும் வகையிலும் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவு 120 நாள்களுக்கு முன்பாகவே தொடங்கும்.
அந்த வகையில், ஜன.10-ஆம் தேதி பயணம் செய்வோருக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.
இந்த நிலையில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களின் பயணச்சீட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது. கோவை உள்ளிட்ட பிற நகரங்களுக்குச் செல்லும் இரவு நேர ரயில்களின் பயணச்சீட்டுகளும் முடிந்தது.
அதிகாலை 5 மணிமுதலே சென்னை எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் பலருக்கு பயணச்சீட்டு கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேலும், ஜன.11-ஆம் தேதி பயணம் செய்வோா் (வெள்ளிக்கிழமை) செப்.13-ஆம் தேதியும்,
ஜன.12-ஆம் தேதி பயணம் செய்வோா் (சனிக்கிழமை) செப்.14-ஆம் தேதியும்,
ஜன.13-ஆம் தேதி பயணம் செய்வோா் ஞாயிற்றுக்கிழமை) செப்.15-ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
பொங்கல் பண்டிகைக்கு செல்வோா் ரயில் நிலைய முன்பதிவு மையங்களிலும், ஐ.ஆா்.சி.டி.சி இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.