விபத்து நடந்த இடத்தில் 
தமிழ்நாடு

ஆவடி காவல் ஆணையர் வாகனம் விபத்து: போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை

ஆவடி காவல் ஆணையர் வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை

DIN

பொன்னேரி : சோழவரம் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த ஆவடி மாநகர காவல் ஆணையர் வாகனம் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக, காவல் ஆணையர் காயமின்றி உயிர் தப்பினார்.

சோழவரம் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்றிருந்த ஆவடி மாநகர காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கி பலத்த சேமடைந்தது. இரண்டு காவலர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பெருஞ்சேரியில் வருகிற 19-ம் தேதி ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஏற்பாடுகளை நாள்தோறும் ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

விழாவுக்கு வரும் வழியில், முதல்வர் சாலைகளில் திரண்டிருக்கும் மக்களையும் சந்திக்க உள்ளார். விழா நடக்க உள்ள இடம் மற்றும் முதல்வர் வந்து செல்லும் பாதையையும் காவல் ஆணையர் கடந்த 5-ம் தேதி ஆய்வு செய்திருந்தார்.

இந்த நிலையில், 2-வது நாளாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் இன்றும் (திங்கள்கிழமை) ஆய்வு செய்தார். முதல்வர் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து விட்டு காவல் ஆணையர் சங்கர் சோழவரம் வழியே தனது அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டு இருந்தார்.

விபத்தில் சேதமடைந்த ஆவடி காவல் ஆணையர் வாகனம்.

அப்போது, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழவரம் அடுத்த செம்புலிவரம் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆவடி மாநகர காவல் ஆணையர் வாகனம் சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து ஆணையரின் வாகனத்திற்கு பின்னால் நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது.

இதில் அடுத்தடுத்த வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் காவல் ஆணையரின் வாகனம் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காவல் ஆணையரின் கார் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காவல் ஆணையர் சங்கர் உயிர் தப்பிய நிலையில், அவரின் பாதுகாவலர் மாரி செல்வம் காயம் அடைந்தார்.

விபத்தில் சேதமடைந்த ஆவடி காவல் ஆணையர் வாகனம்.

இதனை தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விபத்தில் காயமடைந்த காவலரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிர் தப்பிய காவல் ஆணையர் மாற்று வாகனம் மூலம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஆவடி காவல் ஆணையரின் வாகனம் விபத்தில் சிக்கிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT