தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே மின்கசிவு காரணமாக சிறு தீவிபத்து ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், கோவையில் நடைபெறும் கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சனிக்கிழமை காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவரது வருகையால் அவிநாசி சாலையில் காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை விமான நிலையத்தில் விஜய்க்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அவர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு ஓய்வெடுப்பதற்காக சென்றார். சுமார் 4 மணி நேர ஓய்வுக்குப் பிறகு, மாலை 3 மணியளவில் விடுதியிலிருந்து புறப்பட்ட விஜய்க்கு, விடுதிக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார்.
அவரது வருகை அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ரசிகர்களின் கூட்ட நெரிசலால் அவிநாசி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகன ஓட்டிகள் காத்திருக்கும் சூழல் உருவானது. மாநாடு மாலை வரை நடைபெற உள்ளதால், போக்குவரத்து நெரிசல் தொடர வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி சிரமமின்றி பயணிக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் இடத்திற்கு அருகே மின்கசிவு காரணமாக சிறு தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அணைக்கப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே மைக்கை வாங்கி தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், ப்ரெண்ட்ஸ் அங்க நிறைய வயர் செல்கிறது. பாதுகாப்புக்காக சொல்வேற். கொஞ்சம் பின்னாடி வந்துவிடுங்க. இன்னும் 2, 3 மணி நேரம் உங்ககூடதான் இங்க இருக்கப்போறேன். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.