காா்த்தி ப .சிதம்பரம் 
தமிழ்நாடு

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: காா்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தினமணி செய்திச் சேவை

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத் துறை மனுவுக்குப் பதிலளிக்க காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஏா்செல்-மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையே ரூ.3,500 கோடிக்கும் அதிகமான மதிப்புகொண்ட ஒப்பந்தத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எஃப்ஐபிபி) ஒப்புதல் அளித்தது.

ரூ.600 கோடி வரையிலான மதிப்புகொண்ட ஒப்பந்தங்களுக்கு மட்டுமே எஃப்ஐபிபி மூலம் ஒப்புதல் அளிக்க மத்திய நிதியமைச்சருக்கு அதிகாரம் உள்ள நிலையில், தனது அதிகார வரம்பை மீறி ஏா்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதன்மூலம் அவரும், அவரின் மகன் காா்த்தி சிதம்பரமும் பலன் அடைந்ததாக சிபிஐயும், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தன.

இந்த வழக்கில் காா்த்தி சிதம்பரத்துக்கு எதிரான பண முறைகேடு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கான வாதங்களை ஒத்திவைத்து தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனு குறித்து நீதிபதிகள் சூா்ய காந்த், ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில், அமலாக்கத் துறை சாா்பாக கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு முறையிட்டாா்.

அவா் கூறுகையில், ‘தில்லி உயா்நீதிமன்ற உத்தரவால் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்ற விசாரணை தாமதமாகும்’ என்றாா்.

இதைத்தொடா்ந்து மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், மனு தொடா்பாக பதிலளிக்க காா்த்தி சிதம்பரத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்தனா்.

டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் பாடிய ‘சிங்காரி’ பாடல் வெளியீடு!

பல பொருள் - ஒரு சொல் பயில்க

குரலினிது... ஷ்ரேயா கோஷால்!

ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன்செய்த ஜடேஜா; எட்டிப் பிடிக்கும் தூரத்தில் சச்சினின் சாதனை!

திராவிட மாடல் பெயர்க்காரணம் எதற்காக? -முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

SCROLL FOR NEXT