தில்லி சென்ற ஏர் இந்தியா விமானம், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து தலைநகர் தில்லிக்கு 5 எம்.பி.க்கள் உள்பட 150 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு புறப்பட்டது.
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறை விமானி கண்டறிந்தார்.
உடனே இதுகுறித்து சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு தகவல் அளித்தார். இதையடுத்து, விமானம் பாதுகாப்பாக தரையிறங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
பின்னர் சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமானி, கோளாறை சரியான நேரத்தில் கண்டறிந்ததால், பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவம், காரணமாக பயணிகளிடையே சற்று பதற்றம் ஏற்பட்டது.
தொடர்ந்து நள்ளிரவு 12:30 மணிக்கு மேல் அனைத்து பயணிகளும் மாற்று விமானத்தில் தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பயணிகளுக்கு ஏற்பட்ட தாமதத்திற்கு ஏர் இந்தியா நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.