பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் எதிர்வரும் பேரவைத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கவுள்ளது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ப.தா. அருள் மொழி, பொதுச் செயலர் முரளி சங்கர், நிர்வாகக்குழு உறுப்பினர் காந்திமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் அன்புமணி ஆகியோர் கட்சி ரீதியான மோதல்போக்கு காரணமாக தனித்தனியே செயல்பட்டு வரும் நிலையில் அன்புமணி தலைமையில் கடந்த 9 ஆம் தேதி பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், அன்புமணி உள்பட 40 பேருக்கு இருக்கைகள் போடப்பட்ட நிலையில், நிறுவனர் ராமதாஸுக்கு தனி இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார், பாமகவில் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள், அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று(ஆக. 17) நடைபெற்று வரும் பொதுக்குழுவில் மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பொதுக்குழு மேடையில் ராமதாஸ் இருக்கைக்கு அருகே, அவரின் மகள் காந்திமதிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.