தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி, இலங்கையைப் புரட்டிப்போட்டுவிட்டு, சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கும் டிட்வா காரணமாக, அடர்த்தியான மேகக் கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் திருவள்ளூரில் இன்று காலை முதலே பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு மிக கனமழைக்கான வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, டிட்வா மழை குறித்த அறிவிப்பில், வடக்கு திசையிலிருந்து சென்னை நகரத்திற்குள் மிகத் தீவிரமான மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருகின்றன.
அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு சென்னை நகரம் முழுவதும் மழையின் தீவிரம் அதிகரிக்கும். இந்த மேகக் கூட்டங்கள் மெதுவாக நகர்ந்து வருவதால் கனமழை இடைவிடாது பெய்யும். புலிகாட் பகுதிக்கு அப்பால் மேலும் மேகக் கூட்டங்கள் எதுவும் காணப்படவில்லை.
நாம், மழைக்கான இடைவேளைக்குச் செல்வதற்கு முன் இதுதான் மிகப்பெரிய மழையாக இருக்கும், எனவே அடுத்த 2 மணிநேர மழையை அனுபவியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ஆந்திர - தமிழக கடற்கரைக்கு 170 கி.மீ. தொலைவில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மணிக்கு 10 கி. மீ. தொலைவில் நகர்ந்து வந்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு 30 கி.மீ. தொலைவில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேகங்கள் உருவாகி சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மீது மழையாகப் பொழிவதற்கு ஒரு சாதகமான சூழல் இருந்தால் போதும். அந்த அதிர்ஷ்டம் நேற்று இல்லாமல் போனது, ஆனால் இன்று எல்லாம் சரியாக பொருந்தி வந்துள்ளது.
இதனால்தான் வானிலை ஆய்வு மையம் நேற்று சிவப்பு எச்சரிக்கையையும் இன்று ஆரஞ்சு எச்சரிக்கையையும் வெளியிட்டிருந்தது.
வானிலையில் சுழற்சி இருக்கும் வரை மேகக் கூட்டங்கள் எந்த நேரத்திலும் உருவாகலாம். மேலும் நமக்கு அருகே மேகக் கூட்டங்கள் புதிதாக உருவாகும் என நம்புகிறோம்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணி நேரம் சென்னைக்கு அருகிலேயே நிலவும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. பூதசுத்தி விவாஹா முறையில் நடைபெற்ற சமந்தா திருமணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.