திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளின்போது, திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தீபத் தூணில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, மனுவை விசாரித்த நீதிமன்றம், தீபத் தூணில் தீபமேற்ற உத்தரவிட்டது.
இதனிடையே, நீதிமன்றம் உத்தரவிட்ட தீபத் தூணுக்கு 50 மீட்டர் தொலைவில் சிக்கந்தர் தர்கா இருப்பதால், தீப நிகழ்வினால் சமூக அமைதி சீர் கெடுவதற்கு வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியதுடன், நீதிமன்றத் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இருப்பினும், வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலிலேயே இன்று தீபம் ஏற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, தீபத் தூணில் தீபமேற்றப்படாததைக் கண்டித்து இந்துத்துவா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க முயன்ற காவல்துறையினர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மலையேற காவல்துறையினர் அனுமதியளிக்காததால், மலைக்குச் செல்லும் வழியில் சூடமேற்றி, வணங்கிவிட்டு கலைந்து சென்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடுவது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், மீண்டும் கார்த்திகை தீபத் திருநாள் சர்ச்சை சந்தேகத்தை ஏற்படுத்துவதாகப் பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: குரூப் 4 தேர்வு: காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.