சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த சுற்று மழை டிச. 9 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் பதிவிடும் டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் ஹேமச்சந்திரன் மழை நிலவரம் குறித்து தெரிவித்திருப்பதாவது:
”எதிர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை நிகழ்வு தற்போது வலுகுறைய துவங்கியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் லாநினா அமைப்பு முழுமையாக ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது.
லாநினா, எதிர்மறை ஐஓடி(IOD), கடல் வெப்பநிலை, கடல் சார்ந்த அலைவுகளின் சாதகமான நிலைகள் டிசம்பர் மாதத்தில் இயல்பிற்கு அதிக மழைப்பொழிவிற்கு வழி வகுக்கும்.
வானிலை எதிர்ப்பார்ப்பு:
1. டிசம்பர் 10 முதல் 12 ஆம் தேதி வரை காற்றழுத்த தாழ்வு நிலையுடன் இணைந்த கிழக்கில் இருந்து வீசும் காற்றின் காரணமாக 5 ஆம் சுற்று மழை துவங்கி கடலோர மாவட்டங்களில் பரவலாக மழையை கொடுக்கும்.
2. டிசம்பர் 15 ஆம் தேதிக்குப் பின்பு அடுத்தடுத்து தாழ்வு பகுதிகள் உருவாகக் கூடும்.
3. டிசம்பர் 15 முதல் 21-க்கு இடைப்பட்ட தேதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகி பருவமழையை தீவிரப்படுத்தும்.
4. டிசம்பர் 4 வது வாரத்தில் தெற்கு வங்ககடலில் உருவாக கூடிய தாழ்வுப் பகுதி, புயல் சின்னமாக வலுபெற வாய்ப்புள்ளது.
5. ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாத மழை இயல்பிற்கு அதிகமாக அமைந்து, கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களுக்கு நல்ல மழைப்பொழிவை கொடுக்கும்.
6. வட மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு மேலும் இரண்டு தீவிரமான வடகிழக்கு பருவமழை சுற்றுகள் ஜனவரி முதல் வாரத்திற்குள் மழையை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”காற்றழுத்த தாழ்வு நிலையுடன் இணைந்த கிழக்கில் இருந்து வீசும் காற்றின் காரணமாக, டிசம்பர் 9 முதல் 11 ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் உள்பட வட கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 10 அல்லது 11 ஆம் தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.