பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் அரசு ஊழியர் சங்கங்களின் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வருகிற ஜனவரி 6 ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஜாக்டோ - ஜியோ மற்றும் போட்டா ஜியோ அறிவித்திருந்தது.
இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகிய மூவர் குழுவுடன் ஜாக்டோ - ஜியோ மற்றும் போட்டா ஜியோ சங்கத்தினர் இன்று (டிச., 22) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போட்டா ஜியோ ( அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு) மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்த குமார் பேசியதாவது,
''முதல்வரின் ஒப்புதலின் பெயரில் அமைச்சர் குழு சங்கங்களின் கோரிக்கையை முழுமையாக தெரிவித்தோம். பொங்கலுக்கு முன்பாக நல்ல தீர்வை அளிப்பதாக கூறினர். இந்த கூட்டம் நடத்திய விதம் எங்களுக்கு பிடிக்கவில்லை.
அரசால் அங்கீகரிக்கபட்ட சங்கங்கள் எல்லாம் உள்ளது. அவர்களை அழைக்காமல் மூன்று பேர் ஐந்து பேர் உள்ள சங்கங்களை அழைத்து உள்ளனர். இந்த பட்டியலை தயாரித்தது யார்? இதன் மூலம் முதல்வரை அமைச்சரை அவமதிக்கிறார்களா? இந்த பட்டியலை தயாரித்தது யார் என தெரிய வேண்டும்.
முதல்வருடன் கலந்து ஆலோசித்து பொங்கல் முன்பு நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். எந்த முடிவும் எட்டபடாத சூழலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
டிசம்பர் 29 அன்று கவன ஈர்ப்பு போராட்டமும் ஜனவரி 6 முதல் காவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைப்பெறும். 8 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் போட்டோ ஜியோவில் உள்ளனர்'' எனக் குறிப்பிட்டார்.
ஜாக்டோ - ஜியோ சங்கத்தினர் தங்கள் நிர்வாகிகள் உடன் இணைந்து பேசி மாலை தங்களுடைய முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.