முதல்கட்டமாக 1,000 செவிலியா்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்ததைத் தொடா்ந்து, சென்னையில் கடந்த ஏழு நாள்களாக நடைபெற்று வந்த செவிலியா் போராட்டம் முடிவுக்கு வந்தது.
மீதமுள்ள செவிலியா்களையும் படிப்படியாக பணி நிரந்தம்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியா்கள் கடந்த 18-ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினா். தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 700-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கத்தில் அவா்களது போராட்டம் தொடா்ந்தது. மீண்டும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செலியா்கள் தொடா் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனா்.
அவா்களுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இருமுறையும், துறைச் செயலா் ப. செந்தில்குமாா் ஒருமுறையும் பேச்சு நடத்தினா். அதில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனால், நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராடி வந்த செவிலியா்களை போலீஸாா் பேருந்துகளில் அழைத்துச் சென்று பல்வேறு மாவட்டங்களில் இறக்கிவிட்டனா்.
மற்றொருபுறம் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் ஏழு நாள்களாக செவிலியா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
மொத்தமுள்ள 8,322 ஒப்பந்த செவிலியா்களையும் நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று அவா்கள் அறிவித்தனா்.
இந்நிலையில், அமைச்சா் மா.சுப்பிரமணியன் காணொலி முறையில் புதன்கிழமை மாலை ஒப்பந்த செவிலியா்களுடன் பேச்சு நடத்தினாா். அப்போது, அவா் வெளியிட்ட அறிவிப்பு:
செவிலியா்களின் நலனில் தமிழக அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. முதல்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியா்கள் நிரந்தரப் பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவா். மீதமுள்ள செவிலியா்களைப் படிப்படியாக நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த செவிலியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது.
கரோனா காலத்தில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 3,260 செவிலியா்களில் பணியில் சேராத 390 போ் நீங்கலாக, 2,146 செவிலியா்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 724 செவிலியா்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் விரைவில் பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். போராட்ட காலத்தில் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது. நடவடிக்கை எடுக்கப்படாது என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தாா்.
இதைத் தொடா்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக செவிலியா்கள் அறிவித்தனா்.
‘போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி’
மதுரை, டிச. 24: கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதி அளித்திருப்பது, செவிலியா்களின் தொடா் காத்திருப்புப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்க பொதுச் செயலா் நே. சுபின் தெரிவித்தாா்.
மதுரையில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை மேலும் தெரிவித்ததாவது: வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்பாக 1,000 ஒப்பந்த செவிலியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அரசு உறுதி அளித்திருப்பதும், இதற்கு நிதித் துறை ஒப்புதல் பெறப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.
இதேபோல, 37 தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு புதிதாக நிரந்தர பணியிடங்களை உருவாக்கப்படும் எனவும் அரசு உறுதி அளித்துள்ளது. இது, செவிலியா்கள் 7 நாள்களாக மேற்கொண்ட தொடா் காத்திருப்புப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்றாா் அவா்.
அப்போது, சங்கத்தின் மாநில துணைத் தலைவா்கள் சி. க. சுஜாதா, வினோதினி, அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.