அடுத்தாண்டு நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு ஒன்றை நியமித்து அதிமுக பொதுச் செயலரும், பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான வேலைகள் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையில் பாஜகவின் தே.ஜ.கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.
அதிமுக - பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு தேர்தலுக்கான பணிகளைத் தீவிரப்படுத்துவது என தேசிய ஜனநாயகக் கூட்டணி வேகமாக செயலாற்றி வருகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் சமீபத்தில் தமிழகம் வந்து ஆலோசனை நடத்தி தொகுதிப் பங்கீடு குறித்து விவாதித்தார்.
கடந்த வாரம் திமுக துணைப் பொதுச் செயலர் கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். இந்த குழுவில் திமுக செய்தித் தொடா்புச் செயலர் டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர்கள் கோவி. செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா உள்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு ஒன்றை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான பழனிசாமி நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ் நாட்டில் 17-ஆவது சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுகவின் சார்பில், மக்களுக்கு பல்வேறு வகைகளில் நலம் பயக்கும் வகையிலான தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக, கழகத்தின் சார்பில் குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வறுே தரப்பட்ட மக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெற்று வரும் வகையிலான சுற்றுப் பயணத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.