கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக்கூறி பாமகவில் இருந்து ஜி.கே. மணியை நீக்குவதாக அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது.
ராமதாஸ் தலைமையிலான பாமகவில் கௌரவத் தலைவராக ஜி.கே. மணி இருந்துவரும் நிலையில், அவரை அன்புமணி தரப்பு கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
இது குறித்து அன்புமணி தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30-இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18.12.2025 ஆம் நாள் அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணியிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது.
கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30-இன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் அன்புமணிக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது.
அதை ஏற்று ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (டிச. 26) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார்கள்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணியுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.